Azhagiya Theeye: மைலேஜ் தந்த விழிகளின் அருகினில் வானம் பாடல்.. கவிதையாய் ஒரு படம்.. 20ஆண்டுகளைத் தொட்ட அழகிய தீயே!
20 Years Of Azhagiya Theeye: மைலேஜ் தந்த விழிகளின் அருகினில் வானம் பாடல் மற்றும் கவிதையாய் ஒரு படம் மற்றும் 20ஆண்டுகளைத் தொட்ட அழகிய தீயே திரைப்படம் குறித்து அறிந்துகொள்வோம்.
20 Years Of Azhagiya Theeye: இயக்குநர் ராதா மோகன் இயக்கி 2004ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படம், அழகிய தீயே. அடிதடிகள் பார்த்து பழகிப்போன தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அழகிய தீயே , ஒரு கவிதையாக அக்காலத்தில் இருந்தது.
இப்படத்தில் பிரசன்னா, நவ்யா நாயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பிரகாஷ் ராஜ் ஒரு முக்கியமான ரோல் செய்து படத்தையும் தயாரிக்க செய்திருக்கிறார். ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்துக்கு ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விழிகளின் அருகினில் வானம் என்னும் பாடல் பட்டித்தொட்டியெங்கும் பலரால் இன்றும் முணுமுணுக்கப்படுகிறது. அழகிய தீயே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20ஆண்டுகளைத் தொட்டுள்ளது. இந்நிலையில் அப்படம் குறித்து அறிய நம்மிடம் ஏராளமான சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
அழகிய தீயே திரைப்படத்தின் கதை என்ன?:
நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அறையில் வசித்து வருகின்றனர். அதில் கதையின் நாயகன் சந்திரன், சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கிறார். அப்போது சந்திரனைச் சந்திக்கும் நந்தினி என்னும் இளம்பெண், தனக்குப் பிடிக்காத திருமணத்தில் இருந்து காப்பாற்றும்படி, சந்திரனிடம் உதவியைக் கோருகின்றாள். அப்போது, சந்திரன் தன்னுடைய கிரியேட்டிவ் மூளையை வைத்து 5 ஆண்டுகளாக தானும் நந்தினியும் காதலிப்பதாக, நந்தினியைத் திருமணம் செய்ய இருக்கும் அமெரிக்க மாப்பிள்ளை அரவிந்தினிடம் கூறுகிறார்.
ஆனால், அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத அரவிந்தன், இருவரையும் பதிவுத்திருமணம் செய்ய நிர்பந்திக்கிறார். ஒரு சிக்கலான கட்டத்தில் இருவருக்கும் பதிவுத்திருமணம் நடக்கிறது. இவ்விஷயம் நந்தினியின் இல்லத்தில் தெரிந்து, அவரது தந்தையால் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறாள். அமெரிக்க மாப்பிள்ளை அரவிந்தன் ஒரு பிளாட் ஏற்பாடு செய்து, இருவரையும் ஒன்று சேர்த்துவிட்டு அமெரிக்காவுக்கு கிளம்புகிறார்.
ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமைகளால் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. அதன்பின், நந்தினியும் சந்திரனும் மெல்ல நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். அது அவர்களுக்குள் சொல்லாத காதலாகவும் இருக்கிறது. படம் முடிவதற்கு முன், இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்திக்கொண்டு, சேர்வதுபோல் இனிமையாக முடிந்திருக்கும், அழகியே தீயே திரைப்படம்.
அழகிய தீயே திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:
அழகிய தீயே திரைப்படத்தில் சந்திரன் ஆக பிரசன்னாவும், நந்தினியாக நவ்யா நாயரும் நடித்துள்ளனர். அமெரிக்க மாப்பிள்ளை அரவிந்தனாக பிரகாஷ் ராஜூம், நந்தினியின் தந்தையாக பிரமீட் நடராஜனும், சந்திரனின் தந்தையாக பெரியார் தாசனும் நடித்திருக்கின்றனர். இதுதவிர, நான்கு இளைஞர்களுக்கு வீடு கொடுத்து உதவும் ஹவுஸ் ஓனராக எம்.எஸ். பாஸ்கர் நடித்திருக்கிறார். சந்திரனின் சக அறைத்தோழர்களாக இளங்கோ குமரவேலும், ஜெயவர்மாவும், பாலா என்பவரும் நடித்துள்ளனர். இதுதவிர படத்தில் சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் தேவதர்ஷினி நடித்துள்ளார்.
அழகிய தீயே படத்தின் வெற்றிக்கு உதவிய பாடல்கள்:
அழகிய தீயே திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்துக்கு ரமேஷ் விநாயகம் தன் சிறப்பான இசையைத் தந்திருந்தார். படத்தில் விழிகளின் அருகினில் வானம் என்னும் பாடல் மிகப்பிரபலமானது. அதை இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகமே செய்திருந்தார். அடுத்து, உள்ளாலே உள்ளாலே, சந்தனப்பூங்காற்றே, மாட்டிக்கிட்டானே ஆகியப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
அழகிய தீயே திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக மாறியது. படத்தின் வெற்றிக்கு விஜியின் வசனங்கள் பெரிதும் உதவின என்றே சொல்லலாம். குறிப்பாக, ‘ஏம்பா.. புரொடக்ஷன் மேனேஜர் அந்த டாக்டர் கமலாம்மாவை கூட்டிகினு வரச் சொன்னேனே..போய்ப் பார்த்தீயா?’’
‘’ஒன்னுக்குப் பத்து தரம் போனேன்’’
‘’ நீ ஒன்னுக்குப் பத்து தரம் போனீயின்னா.. அது டயபட்டீஸா இருக்கும். போய் அந்தம்மாவ வரச்சொல்லு’’என்று அந்த ஒரு டயலாக் போதும்.
படத்தை இன்று டிவியில் போட்டாலும் நாம் ரசிக்கலாம்.
டாபிக்ஸ்