22 Years of Ezhumalai: ஆக்ஷன், சென்டிமென்ட் என தூள் கிளப்பிய அர்ஜுன்! தெலுங்கு ரீமேக்கில் பக்கா மசாலா படம்
ஆக்ஷன், சென்டிமென்ட் என தூள் கிளப்பும் நடிப்பை வெளிப்படுத்திய அர்ஜுனுக்கு ஏழுமலை கமர்ஷியல் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கு ரீமேக்கில் பக்கா மசாலா படம் ஆக உருவாகி வரவேற்பையும் பெற்றது. படத்தில் ஆனந்தராஜ் பேசிய அடங்கொப்பன் தாமிரபரணில தல முழுக படம் அவரது ஐகானிக் வசனமாக மாறியது
தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நரசிம்மா நாயுடு என்ற படத்தின் ரீமேக் தான் அர்ஜுன் நடித்து இயக்கிய வெளியாகி ஹிட்டடித்த படம் ஏழுமலை. இந்த படத்துக்காக பாலகிருஷ்ணாவுக்கு சிறந்த நடிகர் நந்தி விருது வழங்கப்பட்டது.
வழக்கமாக தமிழ் படங்கள் தான் தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜெகபதிபாபு என தெலுங்கு நடிகர்களால் ரீமேக் செய்திருந்த காலம் மாறி தெலுங்கு படங்களை அடுத்தடுத்து தமிழில் ரீமேக் செய்து வெற்றி கண்ட காலத்தில் இந்த படம் உருவானது.
படத்தில் அர்ஜுன் ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். மற்றொரு ஹீரோயினாக கஜாலா நடித்திருப்பார். மும்தாஜ் கவர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆஷிஷ் வித்யார்த்தி வில்லனாகவும், ஆனந்தராஜ், விஜயகுமார் உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.
ரவுடிசம், சென்டிமென்ட் கலந்த கதை
ஊரை ரவுடிசத்தால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆஷிஷ் வித்தியார்த்தி மகள் கஜாலா, நடன் மாஸ்டராக இருக்கும் அர்ஜுன் மீது காதல் கொள்கிறார். ஆனால் அர்ஜுன் யார் என்ற பின்னணியில் பழைய பகை இருப்பதும் தெரியவருகிறது.
க்ளைமாக்ஸில் அர்ஜுன் - கஜாலா சேர்ந்தார்களா, பகை முடிவுக்கு வந்ததா என்பது தான் படத்தின் ஒன்லைன்.
அர்ஜுன் ஆக்ஷன், உடன் பிறந்தவர்கள் மீது பாசம் என சென்டிமென்டிலும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார். அர்ஜுனின் மனைவியாக பிளாஷ்பேக் காட்சியில் வரும் சிம்ரனும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படத்தின் ஒரிஜினல் பதிப்பிலும் சிம்ரன் தான் ஹீரோயினாக நடித்திருப்பார்.
மும்தாஜ் கிளாமர் டால் போல் வந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருப்பார். தெலுங்கு ரீமேக் என்பதால் ஆக்ஷனில் சமரசம் இல்லாமல் தெறிக்க விடும், அனல் பறக்கும் காட்சிகளாக உருவாக்கியிருப்பார்கள். அர்ஜுனின் ஸ்டைலிஷான சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் ஆனந்தராஜ் பேசியிருக்கும் "அடங்கொப்பன் தாமிரபரணில தல முழுக" என்ற வசனம் அவரது ஐகானிக் வசனமாக மாறியதோடு, பல படங்களில் அவர் தன்னை அடையாளப்படுத்தும் வசனமாகவே இருந்து வருகிறது.
ரிப்பீட் மோடில் கேட்கப்பட்ட பாடல்கள்
வாலி, தாமரை பாடல் வரிகள் எழுத மணிஷர்மா இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. தெலுங்கில் பயன்படுத்திய மெட்டுக்கள் தமிழிலும் பயன்படுத்தப்பட்டன. எல்லா மலையிலும், லக்சு பாப்பா, உன் புன்னகை போன்ற பாடல்கள் படம் வெளியான காலகட்டத்தில் எஃப்எம்களில் அதிகமாக ஒலித்தன. படத்தின் பின்னணி இசையும் நினைவு கூற தக்க வகையில் அமைந்து இருந்தன.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
ஆக்ஷன், காதல், குடும்ப சென்டிமென்ட் என பக்க மசாலா படமாக உருவாகியிருந்த ஏழுமலை தெலுங்கு போல் தமிழிலும் சூப்பர் ஹிட்டானதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் கணிசமான வசூலை குவித்தது. தமிழுக்கு ஏற்றவாறு படத்தை பக்கவாக மாற்றி திரைக்கதை, காட்சியமைப்புகளை வைத்து உருவாக்கியிருந்தார் அர்ஜுன்.
மற்றொரு ஹைலட்டான விஷயமாக இந்த படம் மீண்டும் தெலுங்கில் சிம்ஹா பாலுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பையும் பெற்றது. அர்ஜுனுக்கு ஹிட்டாக அமைந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்