Director Sundar C on Vijay: ‘அவர் படமெல்லாம் எங்கே ஓடப்போதுன்னு.. குரு நாதராக மாறி கொட்டிய விஜய்..’ - சுந்தர் சி பேட்டி!
Director Sundar C on Vijay: “அப்போது நாங்கள் ஒரு படத்தை பார்த்தோம். அந்த படத்தின் மீது எனக்கு பெரிதான அபிப்பிராயம் இல்லை. என் மனதில் இதெல்லாம் ஒரு படம்… இந்த படமெல்லாம் எப்படி ஓடும்? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.” - சுந்தர் சி!

நடிகர் விஜய் தனக்கு குரு நாதர் ஆன கதையை இயக்குநர் சுந்தர் சி அண்மையில் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
மணிரத்னம் சாரை காலி செய்ய வேண்டும்
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ நான் திரைத்துறையில் நுழைந்தவுடன், மணிரத்னம் சாரை காலி செய்ய வேண்டும்.. அந்த மாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய முதல் படத்தின் டைட்டில் ‘புரியாமல் பிரிவோம்’. அது மிகவும் சீரியஸான திரைப்படம்.
அந்த மாதிரியான படங்களைத்தான் எடுக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இருந்தேன். என்னுடைய முதல் திரைப்பட தயாரிப்பாளர் ஒரு திரையரங்க உரிமையாளர். அப்போதெல்லாம் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, அந்த படங்களை நாங்கள் அங்கு பார்ப்போம்.
பெரிதான அபிப்பிராயம் இல்லை.
அப்போது நாங்கள் ஒரு படத்தை பார்த்தோம். அந்த படத்தின் மீது எனக்கு பெரிதான அபிப்பிராயம் இல்லை. என் மனதில் இதெல்லாம் ஒரு படம்… இந்த படமெல்லாம் எப்படி ஓடும்? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், அடுத்த நாள் அந்த திரைப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தார்கள். சின்ன திரையரங்கில் அந்தப்படத்திற்கு இரண்டு காட்சிகள் மட்டுமே ஒதுக்கி இருந்த திரையரங்க உரிமையாளர்கள், மக்களின் வரவேற்பு காரணமாக, காட்சிகளை அதிகப்படுத்தினார்கள். அதன் பின்னர் படத்திற்கான வரவேற்பை பார்த்து, மொத்த திரையரங்கமும், அந்த படத்தை தங்களது திரையரங்கத்தில் காட்சிப்படுத்தினார்கள்.
எனக்கு அந்த படத்தின் வெற்றியில், பெரும் குழப்பமே ஏற்பட்டுவிட்டது. அதற்காகவே, அந்த படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து, மீண்டும் மீண்டும் பார்த்தேன். காரணம், முதல் காட்சியில் படத்தை பார்த்த மக்கள் ஒருவாறும், இரண்டாவது காட்சியைப் பார்த்த மக்கள் இன்னொருவாறும் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா?
குருநாதராக மாறிய விஜய்
ஆனால் எல்லா காட்சிகளிலும், மக்களிடமிருந்து படத்திற்கு ஒரே மாதிரியான வரவேற்பு கிடைத்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு வகையில், அந்த படமும், அந்த படத்தில் நடித்த கதாநாயகனும் எனக்கு குருநாதராக மாறினார்கள் என்று சொல்லலாம். அவர் வேறு யாருமில்லை; தற்போது தளபதியாக இருக்கும் நடிகர் விஜய் தான். அந்த திரைப்படம் ரசிகன்.
அந்த திரைப்படம் என்னுடைய கண்ணோட்டத்தையே மாற்றிவிட்டது. என் முன்னே அந்த படம் வைத்த கேள்வி, உனக்கு பிடித்த படத்தை எடுக்க போகிறாயா? இல்லை ரசிகர்களுக்கு பிடித்த படத்தை நீ எடுக்கப் போகிறாயா என்பது.
அப்போதுதான் நான் இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுத்தேன். அதாவது, நான் எடுக்கும் படம் எனக்கு பிடித்தமான படமாக இருந்த போதிலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கும் அந்தப்படம் பிடித்த படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த முடிவுதான், என்னை இன்று இங்கு உட்கார வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.z
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்