பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மகன்.. ‘இது உன்னோட காலம்..’ - கிரீடத்தை மாற்றும் ரஹ்மான்! -வைரலாகும் பதிவு
‘இது உன்னுடைய காலம்.. அதிகமான அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் இன்று தன்னுடைய 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், அவருடைய மகனான அமீன் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அந்த வாழ்த்தில், ‘ வழி நடத்த பிறக்கிறோம்.. உத்வேகம் தர பிறக்கிறோம்..’ சாதனையாளரும், என் அப்பாவுமான ஏ ஆர் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஏ.ஆர். ரஹ்மான் ‘இது உன்னுடைய காலம்.. அதிகமான அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் 1992ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலமாக, சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்த ரஹ்மான், தொடர்ந்து முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படங்களில் பணியாற்றத்தொடங்கினார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இவர் இசையமைத்த இசைக்காக அவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
இது மட்டுமல்லாமல் கிராமிய விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம் ஃபேர், மிர்ச்சி விருதுகள் என இவர் வாங்கிக்குவித்த விருதுகள் ஏராளம். அண்மையில் இவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காகவும் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இது இவர் வாங்கும் 7 ஆவது தேசிய விருது ஆகும். இவரது இசையில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை படம் ஜனவரி 14 ம் தேதி வெளியாக இருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய உள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு, வழக்கறிஞர் மூலமாக அறிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பலரும் அடுத்தடுத்த வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.
ஏ.ஆர்.ரஹ்மானை சுற்றும் வதந்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான வேலை வேலை என இருந்ததால் அவர் குடும்பத்தை கவனிக்க தவறி விட்டார். அவர், மனைவியுடன் நேரம் செலவிடுவது குறைந்துவிட்டது.
மகளுக்கு திருமணம் முடித்து வைத்ததால் தன் கடமை முடிந்ததாக இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் பேஸிஸ்ட் மோகினி டே உடன் உறவில் இருக்கிறார் என எண்ணற்ற வதந்திகள் உலா வரத் தொடங்கின.
முற்றுப்புள்ளி வைத்த மனைவி
இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது மனைவி சாய்ரா, யாரும் என் கணவரைப் பற்றி தவறாக பேச வேண்டாம். அவர் இந்த உலகத்திலேயே தூய்மையான நபர். நான் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்தேன்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பிய உடன் உங்களிடம் நான் இதுகுறித்து பேசுவேன் என தன் கணவர் மேல் சுமத்தப்படும் அவதூறுகளைத் தாங்க முடியாமல் விளக்கமளித்தார்.
டாபிக்ஸ்