AR Rahman: 7வது முறையாக தேசிய விருது..வேறு எந்த இசையமைப்பாளரும் செய்யாத சாதனை புரிந்த ஏ.ஆர். ரஹ்மான்
பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக சிறந்த பின்னணி தேசிய விருதை வென்றுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், 7வது முறையாக இந்த விருதை தன்வசமாக்கியுள்ளார். வேறு எந்த இசையமைப்பாளரும் இதை செய்தது கிடையாது
70வது தேசிய விருது வெற்றியாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். 2022இல் வெளியான படங்களுக்கான தேசிய விருதில் சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஏ.ஆர். ரஹ்மான் வென்றார். மணிரத்னம் இயக்கத்தில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் பட்டையை கிளப்பிய பிளாக்பஸ்டர் படமான பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது
ஏழாவது தேசிய விருது
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது விருது வென்றிருப்பதன் மூலம் பெருமைமிக்க தேசிய விருதை வென்ற ஏழாவது முறையாக பெறவுள்ளார். இதன் மூலம் வேறு எந்த இசையமைப்பாளரும் செய்யாத சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்தபடியாக இசைஞானி இளையராஜா 5 தேசிய விருதுகளை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளார். கடைசியாக 2015இல் வெளியான தாரை தப்பட்டை படத்துக்காக அவர் தேசிய விருது வென்றார்.
நான்கு விருதுகளுடன் மூன்றாவது இடத்தில் இந்தி பட இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ், மூன்று விருதுகளுடன் மற்றொரு இந்தி பட இசையமைப்பாளர் ஜெய்தேவ் நான்காவது இடத்திலும் உள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் தேசிய விருதுகள்
மணிரத்னம் இயக்கத்தில் 1992இல் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர். ரஹ்மான். தனது முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்ற ஆச்சர்யமூட்டினார்.
இதன் பின்னர் 1996இல் வெளியான மின்சார கனவு, 2001இல் இந்தி படமான லகான், 2002இல் மீண்டும் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக தேசிய விருதை வென்றார். இதைத்தொடர்ந்து கோல்டன் குளோப், கிறிடிக் சாய்ஸ் திரைப்பட வருது, ஆஸ்கர் விருது என உலக அளவில் விருதுகளை பெற்று அங்கீகாரமும் அடைந்தார்.
பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்துக்கு தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், தற்போது பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக 7வது முறை தேசிய விருது வென்றிருக்கிறார். இதன் மூலம் இந்த விருதை அதிக முறை வென்ற இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி
இந்த இருவரின் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் உலக பேமஸ் ஆகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நான்கு முறை தேசிய விருதை வென்று இருப்பதன் மூலம், தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர் - இசையமைப்பாளர் கூட்டணியாக இருந்து வருகிறார்கள்.
ஏ.ஆர். ரஹ்மான் பற்றி இயக்குநர் மணிரத்னம் ஒரு பேட்டியில், "ஒரு ஜிங்கிளுக்காக அவர் பதிவுசெய்த ஒன்றை வாசித்தார். அவரது ஒலி அமைப்பு நம்பமுடியாததாக இருந்தது. இவ்வளவு சிறிய ஸ்டுடியோவில் இது வரை நான் கேள்விப்பட்டிராத விதத்தில் அவை அமைந்திருந்தன. அவர் பயன்படுத்தியது வழக்கமான கருவிகள் அல்லது வழக்கமான வடிவம் அல்லாமல் இருந்தது. எனவே அவர் கதைக்கு பொருந்தமானவரா என முடிவெடுப்பதற்கு முன் சில மாதங்கள் அவருடன் பணியாற்றினோம். ஆறு பாடல்கள் மற்றும் பின்னணி அடிப்படையில் எங்களுக்குத் தேவையானதை அவரால் செய்ய முடியுமா என்றும் பார்த்தோம். இப்படித்தான் அவரை தேர்வு செய்தோம். ரஹ்மானுடனான ஒவ்வொரு படமும் ஒரு சிறப்பு பயணம் தான். அவர் ஒவ்வொரு படத்துக்கும் புதுமை, புதிய ஒலி மற்றும் புதிய இசையை கொண்டு வருவார்."
32 ஆண்டு காலம் மணிரத்னத்துடன் பயணித்து வரும் ஏ.ஆர். ரஹ்மான், அவர் தனது சகோதரர், வழிகாட்டி என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
மெட்ராஸில் இருந்து, ரஹ்மான் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஹாலிவுட் முதல் சர்வதேச சினிமா வரை பல சிறந்த படைப்பாளிகளுடன் பணியாற்றியுள்ளார். வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கு, வாழ்க்கையின் தத்துவமாக, “மற்றவர்கள் உங்களை தாழ்த்தினாலும் உங்களை நம்புங்கள். உங்கள் ஆர்வத்தைத் தொடருங்கள், ஒரு நாள் நீங்கள் உலகை ஆச்சரியப்படுத்துவீர்கள். மேலும், ஒருவரால் உத்வேகம் பெறுவது நல்லது என்றாலும், உங்கள் ஆளுமையில் வசீகரமானதைக் கண்டறிந்து, அதை வளர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் எல்லோரும் உங்களிடம் வருவார்கள், ஏனென்றால் வேறு யாரும் நீங்களாக இருக்க முடியாது." என்றார் மோட்டிவேஷனலாக பேசியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்