இயக்குநர்கள் சமையல் கலைஞர்கள் இல்லை.. பாலிவுட்டினருக்கு மூளை இல்லை! ஷங்கர் கருத்தை விமர்சித்த அனுராக் காஷ்யப்
இயக்குநர்கள் சமையல் கலைஞர்கள் இல்லை. ரசிகர்கள் விரும்புவதை படமாக்கினால் அங்கு வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். அத்துடன் தென்னிந்திய சினிமாக்கள் போல் பாலிவுட்டினரால் படம் எடுக்க முடியாது எனவும் சாடியுள்ளார்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் முதல் நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் வரும் 10ஆம் தேதி பான் இந்திய ரிலீஸாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ ராம் சரண், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை இன்ஸ்டா ரீல்ஸை மனதில் வைத்து உருவாக்கியிருப்பதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்து வருத்தம் அளிப்பதாக பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் ஷங்கரின் கருத்த்தை குறிப்பிட்டு பேசியுள்ளார் அனுராக் காஷ்யப். அதில், "ரசிகர்களின் கவனம் மிகவும் குறுகியிருப்பதாகவும், அதை மனதில் வைத்து இன்ஸ்டா ரீல்ஸ் போன்று தனது கேம் சேஞ்சர் படத்தை உருவாக்கி இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். அவரது படத்தை பார்த்த பிறகுதான் அவர் சொன்ன விஷயம் என்னவென்று புரியும்.
இயக்குநர்கள் சமையல் கலைஞர்கள் இல்லை
பல இயக்குநர்கள் இதுபோன்ற கருத்துகளை முன் வைக்கிறார்கள். எனது படம் ரீல்ஸ் போன்று இருக்கும். அதுபோல்தான் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என சொல்கிறார்கள். ஒரு விஷயத்தை உருவாக்கி பரிமாறுவதற்கு இயக்குநர்கள் சமையல் கலைஞர்கள் இல்லை.
ரசிகர்கள் என்ன விரும்பி பார்க்கிறார்கள் என் ஒருவர் சிந்தித்து விட்டால் அங்கு சரிவு ஏற்படுகிறது. ரசிகர்கள் ஒன்றும் உயிரினம் அல்ல. அவர்கள் ஒரு பெரிய கடல். எல்லாவற்றுக்கும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.
ரசிகர்கள் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய வேண்டியதாகும். . ட்ரெண்ட் என்பதை மனதில் வைப்பதை காட்டிலும், ஒவ்வொரு சினிமாக்களும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையுடனும் உருவாக்கப்பட வேண்டும்" என்றார்.
பாலிவுட்டினரிடம் மூளை இல்லை
தொடர்ந்து இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்க பயப்படுவதாக சாடிய அனுராக் காஷ்யப், பாலிவுட் இயக்குநர்களை காய்ச்சி எடுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "பாலிவுட் இயக்குநர்களுக்கு ஒன்றும் புரிவது இல்லை. அவர்களால் புஷ்பா போன்று ஒரு படம் உருவாக்க முடியாது செய்ய முடியாது. ஏனென்றால் இதுபோன்ற படத்தை தயாரிக்கும் மூளை இல்லை. சுகுமார் போன்ற இயக்குநர்கள் புஷ்பா படத்தை உருவாக்க முடியும். தென்னிந்திய சினிமாக்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு முதலீடு செய்து, தரமான படங்களை உருவாக்கும் வாய்ப்பை இயக்குநர்களுக்கு அளிக்கிறார்கள்.
இங்கு எல்லோரும் தங்களுக்கென ஒரு சினிமா பிரபஞ்சத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் தங்கள் சொந்த பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்கிறார்களா என்பது கேள்வியாகவே இருக்கிறது. இது ஈகோ காரணமாக ஏற்படுகிறது" என்று கூறினார்.
கேம் சேஞ்சர் படம்
இரண்டு வேடங்களில் ராம் சரண் நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படம், ஊழலுக்கு எதிரான கதையம்சத்தில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஐஏஎஸ், கிராமத்து பின்னணி இளைஞன் என இரு கதாபாத்திரங்களில் ராம் சரண் நடித்துள்ளாராம். படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கில் சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகிறது. படத்தின் பாடல்களுக்கு மட்டுமே ரூ. 75 கோடிக்கு மேல் செலவு செய்து பிரமாண்டமாக உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக கேம் சேஞ்சர் உள்ளது.
தொடர்புடையை செய்திகள்