தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Annapoorani: Annapoorani Controversy.. Actress Nayantara Apologized!

Annapoorani: அன்னபூரணி சர்ச்சை.. வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 19, 2024 12:00 AM IST

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

அன்ன பூரணி  பட சர்ச்சை-மன்னிப்பு கேட்ட நயன்தாரா!
அன்ன பூரணி பட சர்ச்சை-மன்னிப்பு கேட்ட நயன்தாரா!

ட்ரெண்டிங் செய்திகள்

"ஜெய் ஸ்ரீராம்

எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய் லீட் ரோலில் நடித்து உள்ளார். நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், சுரேஷ் சக்ரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, சச்சு மற்றும் ரேணுகா ஆகியோர் நடித்து உள்ளனர்.

இது நடிகை நயன்தாராவின் 75வது படமாகும். இந்த திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். சமையல் தொழிலில் சாதிக்க நினைக்கும் பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

செஃப் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டில் இருந்து வரும் நயன்தாரா கடைசியில் தன் கனவை அடைந்தாரா? என்பதே பட கதை.

பிராமண குடும்பத்தில் பிறந்த நயன்தாரா, அசைவ உணவுகளை சாப்பிடுவதும், சமைப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த ரமேஷ் சோலங்கி மத உணர்வை ஏற்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டது என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து தயாரிப்பு நிறுவனமான ஜீ எண்டர்டமென்ட் அறிக்கை ஒன்றை பதிவிட்டது.

அதில், ”உங்களின் மேற்கூறிய கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம். மேலும் அதில் உள்ளவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இது தொடர்பாக, எங்கள் இணை தயாரிப்பாளர்களான எம் இன் இன்டென்ட் ஆர்டிஃபோவுடன் ஒருங்கிணைந்து, மேற்கூறிய திரைப்படம் தொடர்பான உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

மேலும் நெட்ஃபிளிக்ஸ் மூலம் படத்தைத் திருத்தும் வரை உடனடியாக அவர்களின் தளத்திலிருந்து அகற்ற சொல்லி இருக்கிறோம்.

இந்து மற்றும் பிராமணர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. மேலும் அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்.

நன்றி, ஜீ எண்டர்டமென்ட் எண்டர்பிரைசஸ்” எனக் குறிப்பிட்டு இருந்தது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.