51 Years of Anbu Sagotharargal: அண்ணன், தம்பி உறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு 'அன்புச் சகோதரர்கள்' ரிலீஸான நாள் இன்று!
ஜெய்சங்கர், எஸ்.வி.ரங்காராவ், ஜமுனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'அன்புச் சகோதரர்கள்' திரைப்படம் ரிலீஸாகி 51 ஆண்டுகளாகிறது.

தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இன்றைக்கு பல்வேறு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
அந்தவகையில் 1973 ஆம் ஆண்டு மே 4-ல் வெளியான 'அன்பு சகோதரர்கள்'படத்தில் இடம் பெற்றிருந்த 'முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக, அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக.. என பாடி குணச்சித்திர நடிப்பால் நம்மை கண்கலங்கச் செய்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு பாசமானஅண்ணனாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.
இயக்குனர் லட்சுமி தீபக் இயக்கத்தில் வெளி வந்த இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன், நடிகைகள் ஜமுனா, தேவிகா வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேஜர் சுந்தரராஜனின் மனைவியாக லட்சுமி என்கிற கதாபாத்திரம் அனுதாபத்துக்குரியது. செல்வ சீமாட்டி ஜமுனாவைக் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கை விடுவார் மேஜர் சுந்தர்ராஜன். அவரை ஜமுனா பழி வாங்க நினைத்து, ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் வறுமையில் வாட்டி வதைப்பதே திரைக்கதை.