7 Years Of Taramani: காதல் தரும் பொசஸிவ்.. அதுசெய்யத்தூண்டும் அபத்தங்கள்.. அதன்பின்னான சுயம் உணர்தல் தான் ‘தரமணி’!-an article related to the completion of 7 years since the release of the movie taramani - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  7 Years Of Taramani: காதல் தரும் பொசஸிவ்.. அதுசெய்யத்தூண்டும் அபத்தங்கள்.. அதன்பின்னான சுயம் உணர்தல் தான் ‘தரமணி’!

7 Years Of Taramani: காதல் தரும் பொசஸிவ்.. அதுசெய்யத்தூண்டும் அபத்தங்கள்.. அதன்பின்னான சுயம் உணர்தல் தான் ‘தரமணி’!

Marimuthu M HT Tamil
Aug 11, 2024 09:39 AM IST

7 Years Of Taramani: காதல் தரும் பொசஸிவ்.. அதுசெய்யத்தூண்டும் அபத்தங்கள்.. அதன்பின்னான சுயம் உணர்தல் தான் ‘தரமணி’. தரமணி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. அதுதொடர்பான சிறப்புக்கட்டுரை!

7 Years Of Taramani: 7 Years Of Taramani: காதல் தரும் பொசஸிவ்.. அதுசெய்யத்தூண்டும் அபத்தங்கள்.. அதன்பின்னான சுயம் உணர்தல் தான் ‘தரமணி’!
7 Years Of Taramani: 7 Years Of Taramani: காதல் தரும் பொசஸிவ்.. அதுசெய்யத்தூண்டும் அபத்தங்கள்.. அதன்பின்னான சுயம் உணர்தல் தான் ‘தரமணி’!

இப்படம் வித்தியாசமான புரோமோஷன்களால் பலரை கவனிக்க வைத்து, தியேட்டருக்குள் இழுத்தது. அதில் குறிப்பாக ’கீழடியைத் தோண்டறதுல உங்களுக்கு என்ன ஜீ பயம்? பிரின்ட் பண்ணின ஹிஸ்டரி புக்ஸ் எல்லாம் வேஸ்ட் ஆயிடும்னா?; 'ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே கைது பண்றாங்க. பார்த்துக்கோ’ படத்தின் போஸ்டருக்குள், இருந்த அரசியல் வசனங்கள் பலரையும் படம் பார்க்கத்தூண்டியது. படமும் ஐ.டி. துறையில் பணிபுரியும் நபர்களின் கதையைப் பேசுவதால், பல இளைஞர்கள் படத்தைப் பார்த்து படம் சப்தமின்றி சூப்பர் ஹிட்டானது.

தரமணி திரைப்படத்தின் கதை என்ன?:

சென்னையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் கணவரைப் பிரிந்த தாய், ஆல்தியா ஜான்ஸன். ஒரு மழை நாளில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஆல்தியாவும் பிரபுநாத்தும் முதலில் பேசுகின்றனர்.பின் நண்பர்களாகின்றனர்.

பிரபுநாத்தும் தானும் ஒரு கால் சென்ட்டரில் பிடிக்காத வேலையைச் செய்வதாகவும், தனக்கு இருக்கும் ஒரே ஆறுதல், தன் காதலி சவுமியாவின் அலுவலகத்துக்கு எதிரில் இருக்கும் அலுவலகத்தில் பணிசெய்வது மட்டுமே என்று சொல்கிறார்.

சவுமியாவுக்கு அமெரிக்கா செல்ல விசா எடுக்கப்பணம் தேவை என்று பிரபுநாத்திடம் கேட்கிறார். அப்போது பிரபுநாத், தூங்கிக்கொண்டிருக்கும் ரயில் பயணி ஒருவரிடம் திருடி, அதனை சவுமியாவிடம் கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் அமெரிக்கா சென்ற சவுமியா, அங்கு வேறு ஒருவரைப் பார்த்து திருமணம்செய்துகொண்டார். இதை அறிந்து மனமுடைகிறார், பிரபுநாத். மேலும், தான் பணத்தைத் திருடிய நபர், மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பதை அறிந்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி, தரமணி ரயில்வே நிலையத்தில் தன்னுயிரை மாய்க்க நினைக்கிறார். அப்போது ரயில்வே காவலாளி ஒருவர் பிரபுவை காப்பாற்றி, பின் இருவரும் நண்பர்களாகின்றனர்.

ஒருநாள் ஆல்தியா பிரபுநாத்தை தன் மகனிடமும், தன் தாயிடமும் அறிமுகப்படுத்துகிறார். ஆனால், ஆல்தியாவின் தாய், பிரபுநாத்துடன் பழகக்கூடாது எனச்சொல்லி, அவளை வீட்டை விட்டு துரத்துகிறார். இதனால் ஆல்தியாவும் ஒரு நாள் முழுக்க இரவில் தரமணி ரயில் நிலையத்தில் தங்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறாள். அப்போது பிரபுநாத்திடம் ஆல்தியா, தனது முன்னாள் கணவர் ஒரு தன்பாலின சேர்க்கையாளர் என்பதை அறிந்து மணவாழ்க்கையில் இருந்து விலகியதாகக் கூறுகிறார். ஒரு நாள் ஆல்தியாவின் மகன் அட்ரியன், பிரபுநாத்தை அப்பா என அழைக்கலாமா எனக் கேட்கிறார். பின் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழத்தொடங்குகின்றனர்.

பிரபுநாத், ஆல்தியாவை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார். ஒரு கட்டத்தில் ஆல்தியாவை, அவரது மேல் அலுவலருடன் சந்தேகப்பட்டு, ஆல்தியாவிடம் கேள்வி கேட்கிறார். அப்போது இருவருக்கும் இடையே பிரேக்-அப் ஆகிறது.

இதனைத்தொடர்ந்து, பிரபு தன் முன்னாள் காதலி சவுமியா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்ததை அறிந்து, அவரது ஹோட்டல் அறையில் சென்று சந்திக்கிறார். அப்போது, தனியாக இருக்கும் சவுமியாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதுபோன்று படங்கள் எடுத்து, பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். ஆனால், சவுமியா, பிரபுவை பார்த்ததும் தந்த ஒரு சாக்லேட் பெட்டியில் நிறைய பணத்தை வைத்துக்கொடுத்ததை அறிந்து, தான் இப்படி கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்டவர் ஆகிவிட்டோமே என வருத்தப்பட்டுக் கிளம்புகிறார்.

இதனிடையே ஆல்தியா, தனது மேல் அலுவலருடன் மிக நெருக்கமாக இருப்பதுபோல் படமெடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார். இதனைப் பார்த்து தனது மகளும் மனைவியும் தன்னைத் தவறாக நினைப்பார்கள் என கெஞ்சுகிறார், மேல் அலுவலர். அப்போது ஆல்தியா தான் இந்தப் படங்களை நீக்க வேண்டுமென்றால், தன்னை வேறு ஒரு அலுவலகத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்யவேண்டும் எனக் கேட்கிறார். அது நடக்கிறது.

இதை அறிந்திராமல், சோசியல் மீடியாவை பார்க்கும் பிரபு, ஆல்தியாவின் நிலையை அறிந்து தன் உயிரை இரண்டாவது முறையாக மாய்த்துக்கொள்ள நினைக்கிறார்.

அப்போது மனம்மாறி மீளும் பிரபுநாத், தனியாக இருக்கும் பெண்களிடம் நட்பாகப் பழகி, காம இச்சையைத் தூண்டுவது போல் போனில் பேசி, அதை ரெக்கார்டு செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார். ஒரு நாள் இவரது பேச்சை ஒட்டுக்கேட்கும் சென்னை நகரின் உதவி காவல் ஆணையருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால், தன் மனைவியுடனும் பிரபுநாத் பேசுவதை அறிகிறார். பின், பிரபுநாத் இருக்கும் இடம் சென்று, அவரை அடித்து, கண்டிக்கும் உதவி காவல் ஆணையர், பின் இது பற்றி வெளியில் தெரியாமல் கமுக்கமாகப் பார்த்துக்கொள்கிறார். பின் பிரபுநாத்தும் திருந்துகிறார்.

ஒருநாள் சவுமியாவிடம் இருந்து பிரபுவுக்கு பணம் வருகிறது. பின் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு, தான் திருடிய நபரின் குடும்பத்தினரிடம்போய் கொடுக்கிறார், பிரபுநாத். பின், அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்புக்கேட்கிறார். அக்குடும்பமும் மன்னிக்கிறது.

பிரபுநாத், தான் செய்த தவறுகளை எல்லாம் உணர்ந்து, ஆல்தியாவை நேரில் பார்த்து மன்னிப்புக்கேட்கிறான். அப்போது மன்னிக்கும் ஆல்தியா, தயவுசெய்து, இந்த நகரை விட்டு வெளியேறினால், தன் மகன் அட்ரியனின் வாழ்க்கை காக்கப்படும் என்கிறார். பின் பிரபு, ஆல்தியாவைப் பலநாட்கள் பின் தொடர்ந்து பார்த்து மன்னிப்புக்கேட்கிறார். பின், ஆல்தியா பிரபுவை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். படம் சுமுகமாக முடிகிறது.

தரமணி படத்தில் நடித்தவர்களின் விவரம்:

தரமணி படத்தில் ஆல்தியா ஜான்ஸனாக ஆண்ட்ரியா ஜெர்மியாவும், பிரபுநாத்தாக வசந்த் ரவியும்,அட்ரியனாக மாஸ்டர் அட்ரியன் நைட் ஜெஸ்லியும், சவுமியாவாக அஞ்சலியும், உதவி காவல் ஆணையராக தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாரும் நடித்திருந்தனர்.

தரமணி படத்தின் வெற்றிக்கு உதவிய ஒளிப்பதிவும் இசை மற்றும் பாடல்கள்:

சென்னையை யாரும் பார்க்காத புதுகோணத்திலும், கதையின் நகர்வையும் அற்புதமாக கடத்தியிருந்தது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. படத்திற்கு கூடுதல் பிளஸ் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், நா. முத்துக்குமார் எழுதிய 5 பாடல்களும் எனலாம். குறிப்பாக, ‘யாரோ உச்சிக்கிளை மேலே’, ‘ உன் பதில் வேண்டி யுகம்பல தாண்டி உன்மத்தம் கொண்டே’, ’பாவங்களை’ என இந்தப் படத்தின் மொத்த ஆல்பமே ரசிக்கப்பட்டது. தவிர, ஆண்ட்ரியா இசையமைத்த ஒரு பாடலையும், நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். இப்பாடல்கள் வெளியாகும்போது, நா. முத்துக்குமார் உயிரோடு இல்லையென்றாலும், பாடல்கள் தந்த தாக்கம் பல நா.முத்துக்குமார் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்தது.

தரமணி படம் இன்றைய தலைமுறை இளைஞர்களின் மனவோட்டத்தைப் பிரதிபலித்தது. படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அதே புதுப்படத்தின் ஃபீல் கொடுப்பது, தரமணி படத்தின் மிகப்பெரிய பலம்!

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.