18 Years Of Dishyum: ஸ்டன்ட் நடிகராக ஜீவா பரிணமித்த 'டைலாமோ’ பாடலால் உச்சம் தொட்ட டிஸ்யூம் படத்தின் கதை!
Dishyum: டிஸ்யூம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
18 Years Of Dishyum: இயக்குநர் சசி இயக்கத்தில் ஜீவா, சந்தியா, பக்ரு, நாசர் மற்றும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்த திரைப்படம் தான், டிஸ்யூம். இப்படமானது பிப்ரவரி 2, 2006ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களால் அற்புதமான வரவேற்பினைப் பெற்றது. இப்படத்தினை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவன ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். ஒளிப்பதிவினை சாண்டோனியா டெர்ஜியா செய்ய, இசையை விஜய் ஆண்டனி செய்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'டைலாமோ டைலாமோ’, ‘நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே’, ‘கிட்ட நெருங்கி வாடி’, ‘பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதினால்’ ஆகிய நான்கு பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்து, படத்துக்கு மிகப்பெரிய மைலேஜை தந்தன.
டிஸ்யூம் படத்தின் கதை என்ன? படகு வீட்டை அழகாய் வரையும் கவின் கலைக்கல்லூரி மாணவி சிந்தியாவுக்கும், அந்தப் படகு வீட்டில் தீப்பற்றி எரியும் சூழல் ஏற்பட்டால் சினிமாவிற்கு ஒரு அடிதடி காட்சி எவ்வாறு எடுக்கலாம் என நினைக்கும் சினிமா சண்டைக்காட்சியில் நடிக்கும் நடிகர் ‘ரிஸ்க் பாஸ்கருக்கும்’ இடையே காதல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை ஆகும்.
இப்படத்தில் ரிஸ்க் பாஸ்கர் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவாவும், சிந்தியாவாக நடிகை சந்தியாவும் நடித்துள்ளனர். அமிதாப்பாக கின்னஸ் பக்ருவும், ஜெயச்சந்திரனாக நாஸரும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் சினிமாவின் சண்டைக்காட்சிகளுக்காக டூப் போடும் சண்டைக்கலைஞர்களின் வாழ்வில் நிகழம் காயங்கள், சோகங்கள், பணியின்மை ஆகியவற்றை ஜனரஞ்சகமாக சிரிப்புடன் கூடிய கதாபாத்திரங்களை உருவாக்கி சொல்லி இருப்பார், இயக்குநர் சசி.
இப்படத்தில் சற்று உயரம் குறைவான நடிகர் பக்ரு செய்யும் சேட்டைகள் அலாதியானவை. குறிப்பாக, பந்தயம் கட்டி, தன் காலுக்கு இடையில் சக ஸ்டன்ட் கலைஞரை போகச்சொல்லி செய்யும் காமெடி இன்னும் நிலைத்து நிற்கிறது.
ராம், ஈ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவுக்கு இப்படம் மிகப்பெரிய கதையம்சமாகவும் கமர்ஷியலாகவும் கை கொடுத்த படம், டிஸ்யூம். இப்படத்தில் ஸ்டன்ட் கலைஞராக நடிப்பதற்காக, குங் ஃபூவில் மூன்று ஆண்டுகள் பயிற்சியும், ஜிம்னாஸ்டிக் பயிற்சியும் மேற்கொண்டிருந்தார், நடிகர் ஜீவா. படம் தொடங்குவதற்கு முன் ஸ்டன்ட் கலைஞர்களின் பழகி, அவரது மேனரிசதத்தினை பயின்றார்.
இப்படத்தில் தான் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், சினிமாவாக விஜய் ஆண்டனி இசையமைத்து வெளியான முதல் திரைப்படம் ‘சுக்ரன்’. இவரது தனித்துவமான வரி மற்றும் குரலில் வெளிவந்த ‘டைலாமோ டைலாமோ’எனும் பாடல் 90’ஸ் கிட்ஸ்கள் முதல் 2கே கிட்ஸ்கள் வரை பலரையும் இன்று வரை முனுமுனுக்க வைத்தது.
இப்படத்தில் கமிட் ஆகி வெளியில் சென்ற நடிகர்கள்: 2004ல் தொடங்கப்பட்ட இப்படத்தில் நடிக்க நடிகை பூஜாவை கமிட் செய்துள்ளனர், தயாரிப்புக் குழுவினர். பின்னர் தான் சந்தியா நடித்துள்ளார். அதேபோல், இப்படத்தில் ஜீவாவுக்குப் பதில் நடிகர் அசோக், லீட் ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். படப்பிடிப்பும் 11 நாட்கள் நடத்தப்பட்டபின் ஒரு சில காரணங்களால் விலகினார். அதேபோல், நடிகர் விஜய் சேதுபதியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் அக்காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் விஜய்சேதுபதி குறிப்பிடத்தக்க முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சசி என்னும் அற்புத கலைஞர்: வெற்றி கிடைத்துவிட்டது என்பதற்காக அடுத்தடுத்த படங்களை இயக்காமல் தனக்கான நல்ல கதைக்கரு கிடைக்கும் வரை காத்திருந்து சினிமா இயக்கும் நல்ல இயக்குநர்களில் சசியும் ஒருவர். 1998ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘’சொல்லாமலே'' மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. அதில் நடித்த நடிகர் லிவிங்ஸ்டனுக்கும் பெரிய பிரேக் கொடுத்தது. அதன்பின், உடனடியாக படம் எடுக்காமல் நல்ல கதையம்சத்துடன் எடுத்து 2002ஆம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் தான் ‘ரோஜாக்கூட்டம்’. அதன்பின் 2004ல் எடுக்கத் தொடங்கி 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், ‘டிஸ்யூம்’. இப்படத்தின் முதல் காட்சி பார்வையாளர்களாக சண்டைக் கலைஞர்கள் திகழ்ந்தனர். ஆம். சண்டைக் கலைஞர்களுக்கு இப்படம் முதலில் போட்டு காண்பிக்கப்பட்டது.
இப்படி டிஸ்யூம் படம் பற்றிப் பேச எண்ணற்ற விஷயங்கள் இருந்தாலும், 18 ஆண்டுகளை நிறைவுசெய்திருந்தாலும் தற்போது இப்படத்தை டிவியில் போட்டாலும் சிரித்து ரசித்துப் பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்