நாட்டாமை தந்த பீக்.. முத்து படம் மூலம் ரஜினிக்கே டஃப்.. வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் கதை
நாட்டாமை தந்த பீக்.. முத்து படம் மூலம் ரஜினிக்கே டஃப்.. வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் கதை குறித்து பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். குறிப்பாக 90’ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் பிடித்தமான வில்லன், பொன்னம்பலம். அவரைப் பற்றி நினைவுகூர ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
நடிகர் பொன்னம்பலத்தின் கதை: நடிகர் பொன்னம்பலம் 1963ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந்தார். சினிமாவில் 1987ஆம் ஆண்டு முதல் சண்டைக் காட்சியின்போது அடியாளாக நுழைந்த பொன்னம்பலம், 1988ஆம் ஆண்டு ’கலியுகம்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கூடுதல் வில்லனாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி 1989ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கூடுதல் வில்லனாகவும்,1990ஆம் ஆண்டு மைக்கேல் மதன காமராஜனில் ஒரு சிறுவேடத்திலும் நடித்தார்.
கை, கால்களில் காயமோ, எலும்பு முறிவோ விழாமல் ஃபைட் செய்வதில் திறம் வாய்ந்து இருந்ததால் 'ஸ்பேர் பார்ட்ஸ்' பொன்னம்பலம் எனும் பெயரும் பெற்றார். 1993ல் பி.வாசு இயக்கிய வால்டர் வெற்றிவேல் படம் இவருக்கு வில்லனாக முக்கிய திருப்புமுனையினை தந்த திரைப்படமாக அமைந்தது.
பிறமொழிகளிலும் வில்லனாக ஜொலித்த பொன்னம்பலம்:
பொன்னம்பலம் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாள சினிமாவிலும் வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார். 1988ஆம் ஆண்டு ’மூன்னம் முறா’ என்னும் மலையாளப்படத்தில் முன்னணி நடிகர் மோகன் லாலுக்கு வில்லனாகவும், அதேபோல் ஓர்க்கபுரத்து என்னும் மலையாளப் படத்திலும் நடித்திருந்தார்.
1992ஆம் ஆண்டு ‘கரண மொகடு’ என்னும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி, பரதன், ஏர்போர்ட், செந்தூரப்பண்டி ஆகியப் படங்களில் நடித்தார். ’முகுரு மோகல்லு’ என்னும் தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியை எதிர்க்கும் வில்லனில் ஒருவராக நடித்திருப்பார். அதேபோல், ஹிட்லர் படத்திலும் சிரஞ்சீவிக்கு வில்லனாக நடித்திருப்பார், பொன்னம்பலம். மேலும், கடக்: லேதல் என்னும் இந்தி படத்திலும்; ரஷக் என்னும் இந்தி படத்திலும் நடித்து பாலிவுட்டிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டி, இந்திய அளவில் பிரபலமான வில்லன் நடிகர் ஆனார், பொன்னம்பலம்.
பின், ஆனஸ்ட் ராஜ் படத்தில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்திருப்பார். அதேபோல், கன்னடத்தில் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்த சின்னா என்னும் படத்தில் வில்லனாக சில காட்சிகளில் வந்திருப்பார், பொன்னம்பலம்.
பெயர் பெற்றுத்தந்த படங்கள்:
’நாட்டாமை’ படத்தில் கொடூர வில்லனாகவும், ’முத்து’ படத்தில் காளி என்னும் கொடூர அடியாளாகவும் நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார், பொன்னம்பலம். பின் அரவிந்தன், அருணாசலம், வள்ளல், சிம்மராசி, அமர்க்களம், முகவரி, வல்லரசு, மாயி, தவசி, கில்லி, அருள், கிரி, போஸ், வரலாறு, மலைக்கோட்டை, வேங்கை, கோமாளி ஆகியப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை தனது கொடூர வில்லத்தனத்தால் கவர்ந்தவர்.
பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார், பொன்னம்பலம்.
உடல்நிலைப் பாதித்து மீண்ட பொன்னம்பலம்:
திடீரென உடல் நலம் குன்றிய பொன்னம்பலத்துக்கு இரண்டு கிட்னிகளும் செயல் இழக்க நிதி நெருக்கடி காரணமாகப் பல முறை தற்கொலைக்கு முயற்சித்து, தப்பித்துள்ளார். இவரின் நிலைமை அறிந்த நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், அர்ஜூன், பிரபுதேவா, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி ஆகியப் பலர், பொன்னம்பலத்தின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி 2023ல், குறும்பட இயக்குநர் ஜெகநாதன்(35) என்பவரது சிறுநீரகம் தானமாகப் பெற்று பொருத்தப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர்பிழைத்தார். பின் பொன்னம்பலம் தற்போது மெல்ல உடல்நலம் தேறிவருகிறார்.
காயமோ முறிவோ இல்லாமல் சண்டைக்காட்சிகளில் கலக்கிய வில்லன் நடிகர் பொன்னம்பலம், இன்னும் நீண்ட ஆயுளுடன் இடையிலிருந்த ஆரோக்கியப் பாதிப்பில் இருந்து நல்லமுறையில் மீண்டு வந்து, தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கலக்கு கலக்கவேண்டும்.
கொடூரமாக நடித்து பலரைக் கவர்ந்த பொன்னம்பலத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
டாபிக்ஸ்