IPL 2024: 'Tomorrow is another day... my dear!' சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு அமிதாப் பச்சன் ஆறுதல்!
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனை புரிந்த சன் ரைசர்ஸ், ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோரை பதிவு செய்ததது மோசமான சாதனையை புரிந்தது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (26-05-2024) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆறுதல் கூறி உள்ளார்.
சொதப்பிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
கொல்கத்தாவின் துல்லிய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சீட்டுகட்டு போல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 24, ஐடன் மார்க்ரம் 20 ரன்கள் அடித்தனர்.
சன் ரைசர்ஸ் அணியில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் மட்டும் அடிக்கப்பட்டன. இந்த சீசனில் பவுர்புல்லான பேட்டிங் லைன் அப்பாக இருந்த சன் ரைசர்ஸ் அணியை தெறிக்கவிடும் பவுலிங்கில் கொல்கத்தா அணி கட்டுப்படுத்தியது.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனை புரிந்த சன் ரைசர்ஸ், ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோரை பதிவு செய்ததது மோசமான சாதனையை புரிந்தது.
கொல்கத்தா பவுலர்களில் ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வைப்வ் அரோரா, சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
மூன்றாவது முறையாக சாம்பியன் ஆன கொல்கத்தா
இதையடுத்து மிகவும் குறைவான ஸ்கோரை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதையடுத்து 10.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் அடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் பைனலில் மிகவும் அதிக பந்துகள் வித்தியாசத்தின் வென்ற அணி என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றது. அந்த அணிக்கு பவுலிங், பேட்டிங் என முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, தொட்டதெல்லாம் துலங்கும் ஆட்டமாக இந்த போட்டி அமைந்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 59 ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்கள் அடித்தனர்.
'நான் அவளுக்காக வருத்தப்பட்டேன்'
இது தொடர்பாக தனது வலைப்பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ள அமிதாப் பச்சன், "ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்துவிட்டது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மிகவும் உறுதியான வெற்றியை பெற்றுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறுமனே வெளியேற்றப்பட்டது. சன் ரைசர்ஸ் அணி நல்ல அணி என்பதால் பல வழிகளில் ஏமாற்றமளிக்கிறது. மேலும் அவர்கள் மற்ற போட்டிகளில் விளையாடிய நாட்களில் அவர்களின் மிகச் சிறந்த செயல்திறனைக் வெளிப்படுத்தி இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் இருந்து 'மிகவும் தொடும்' தருணத்தைப் பற்றி அவர் பேசினார்,
"ஆனால் இதில் கவனிக்க கூடியது என்னவெனில் அழகான இளம் பெண்... அரங்கத்தில் இருந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர், தோல்விக்கு பிறகு உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் விடுகிறார். தனது உணர்ச்சியை வெளிப்படுத்தாதபடி கேமராக்களில் இருந்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அவளை நினைத்து வருந்தினேன்!! பரவாயில்லை... நாளை என்பது மற்றுமொரு நாளே... மை டியர்..!!"