‘ஒவ்வொரு வருஷமும் அவர் குரல கேக்குறதுக்காக காத்திருப்பேன்.. ஆனா இன்னைக்கு கடவுளும் பிரபஞ்சமும்..’ - ஆதிக் ரவிச்சந்திரன்!
'ஒவ்வொரு ஆண்டும் அஜித் சாரின் குரலை திரையரங்கில் கேட்பதற்காக காத்திருப்பேன். ஆனால், இப்போது கடவுள் மற்றும் இந்த பிரபஞ்மே இணைந்து அவருடன் பணியாற்றவும், அவர் டப் செய்வதை அருகிலேயே இருந்து என்னை கேட்கவும் வைத்து விட்டன. - ஆதிக் ரவிச்சந்திரன்!
நடிகர் அஜித் குமார்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தத் திரைப்படத்தில், நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், அஜித் குமாரின் இந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்து படப்பிடிப்பு மும்மரமாக நடந்தது. அண்மையில் இந்தப்படத்தின் அஜித்துடனான கடைசி நாள் புகைப்படத்தை பகிர்ந்த படத்தின் இயக்குநர் எமோஷனலான பதிவை வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையே, படத்தில் இடம் பெற்று இருக்கும் அஜித்தின் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது அஜித் குட் பேட் அக்லி படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், ‘ஒவ்வொரு ஆண்டும் அஜித் சாரின் குரலை திரையரங்கில் கேட்பதற்காக காத்திருப்பேன்.ஆனால், இப்போது கடவுள் மற்றும் இந்த பிரபஞ்மே இணைந்து அவருடன் பணியாற்றவும், அவர் டப் செய்வதை அருகிலேயே இருந்து என்னைக் கேட்கவும் வைத்து விட்டன. இந்த ஆண்டு குட் பேட் அக்லி என்ற அற்புதமான பயணத்துடன் தொடங்கி முடிந்தது.இந்த நினைவுகளை எப்போதும் என் மனதில் பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன்.
உங்களுக்கு என்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் சார்... லவ் யூ சார்’ என்று பதிவிட்டு இருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடிகர் அஜித் துணிவு படத்திற்குப் பின் கமிட்டான படம், விடாமுயற்சி. இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்மையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் அஜித், காலை 7 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று, இரவு இரண்டு மணி வரை, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் அஜித் நடித்த படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்த திரிஷா:
இப்படத்தில் நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர்.மகிழ் திருமேனி இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜானில் படமாக்கியுள்ளார்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் 27ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்