‘கம்பி எண்ணப்போகிறாரா புஷ்பராஜ்?’ அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் சிறை.. நீதிமன்றம் அதிரடி!
சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ப்ரீமியர் ஷோ பார்க்க வந்த பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 13ஆம் தேதியான இன்று அல்லு அர்ஜுன் தேசிய அளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ப்ரீமியர் ஷோ பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்கத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் புஷ்பா 2 படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் வருவதாக கூறிய நிலையில், அந்த தகவல் வெளியாகி ரசிகர்கள் அவரை காண முண்டியடித்து கொண்டதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
நீதிமன்ற காவல்
ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் இருந்த அல்லு அர்ஜுனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் சிக்கட்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே அல்லு அர்ஜுன் தரப்பில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர மனுவாக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று அல்லு அர்ஜுன் ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அல்லு அர்ஜுன் தரப்பில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
கம்பி எண்ணப்போகும் அல்லு அர்ஜுன்
இந்த வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கும் அல்லு அர்ஜுன் உடனடியாக நீதிமன்றத்தை நாடினாலும் ஜாமின் கிடைக்காத பட்சத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்கிற காரணத்தால் கண்டிப்பாக சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
ஆனால் அல்லு அர்ஜுன் ஜாமின் மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அல்லு அர்ஜுன் கம்பி எண்ணும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் மீது வழக்கு
புஷ்பா 2 படம் ரிலீசுக்கு முந்தைய நாளான டிசம்பர் 4ஆம் தேதி சந்தியா திரையரங்கில் அல்லு அர்ஜுனை காண ஏற்பட்ட கூட்ட நெரசலில் ரேவதி என்ற பெண் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவரது 8 வயது மகன காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது ஐபிசி பிரிவு 118 (1), பிரிவு 3 (1) உள்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டால் ஒரு ஆண்டு முதல் பத்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அல்லு அர்ஜுன் ஆதரவு
இந்த கோர சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவு அளிப்பேன் என உறுதி அளித்தார். அத்துடன் இரு நாள்கள் கழித்து ரேவதியின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் அளித்ததுடன், சிகிச்சை பெற்று வரும் மகனின் மருத்துவ செலவு மற்றும் படிப்பு செலவை பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்