28 Years of Kadhal Kottai: இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடியும் காதல்..! கடிதம் மூலம் காதலை வளர்த்த படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  28 Years Of Kadhal Kottai: இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடியும் காதல்..! கடிதம் மூலம் காதலை வளர்த்த படம்

28 Years of Kadhal Kottai: இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடியும் காதல்..! கடிதம் மூலம் காதலை வளர்த்த படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 12, 2024 06:15 AM IST

கடிதம் மூலம் இருமனங்களுக்கு இடையே காதலை வளர்த்த காதல்கோட்டை படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக உள்ளது. தமிழில் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது முதன்முதலில் இந்த படத்துக்காக இயக்குநர் அகத்தியனுக்கு கிடைத்தது.

இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடியும் காதல், கடிதம் மூலம் காதலை வளர்த்த படம்
இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடியும் காதல், கடிதம் மூலம் காதலை வளர்த்த படம்

அஜித் குமார், தேவையானி சினிமா கேரியரில் மிகப் பெரிய பிரேக் கொடுத்த படமாக இருந்த இந்த படத்தை அகத்தியன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். ஹீரோ, தலைவாசல் விஜய், கரண், மணிவண்ணன், பாண்டு உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

பார்க்காத காதல்

காதல் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்கிற அளவில் காதலை பற்றி ஏராளமான படங்களை தமிழில் வெளியாகியுள்ளன. அந்த வகையில் பார்க்காமலேயே கடிதம் வழியே காதல் என்கிற புதுமையான கதையமைப்பில் ஒவ்வொரு காட்சியும், வசனமும் ரசிக்கும் விதமாக அமைந்த படம் தான் காதல் கோட்டை.

எதிர்பாராத விதமாக அஜித் - தேவையானி இடையே கடிதம் மூலமாக உறவு ஏற்பட, கடிதத்தின் வழியே காதல் வளர்க்கிறார்கள். இறுதியில் அவர்களை காதல் எப்படி சேர்த்து வைக்கிறது என்பது தான் காதல் கோட்டை படத்தின் ஒன்லைன்.

படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதி வரை ரசிக்கும் விதமான காட்சிகளுடன், வசனங்களுடனும் செதுக்கியிருப்பார் இயக்குநர் அகத்தியன்.

கடிதத்தின் தொடர்பில் இருக்கும் தேவையானிக்கு, அஜித் போன் கால் பேசும்போது அருகில் நடக்கும் போராட்டம் காரணமாக இருவரும் பேச முடியாமல் தவிப்பது, கரண் - அஜித் இடையே பேருந்தில் நிகழும் உரையாடல், ப்ரீ க்ளைமாக்ஸாக ஹீரா, கரணுடன் தேவையானி சந்திப்பு என ஏராளமான காட்சிகளை சொல்லிக்கொண்டே பேகலாம்.

ஹீராவின் ஒருதலை காதல்

அஜித்தின் எம்டி கதாபாத்திரத்தில் வரும் ஹீரா, அவரை ஒரு தலையாக காதலிப்பார். ஆனால் அஜித் அவரது காதலை தவிர்ப்பார்.

அஜித் மீதான காதலை பல்வேறு வகைகளில் ஹீரா வெளிப்படுத்துவதும், அதுதொடர்பான காட்சிகளும் தனி டிராக்கில் ரசிக்கும் விதமாக இருக்கும். ஆண் மீது பெண்ணுக்கு ஏற்படும் பைத்தியகாரத்தனமான காதலை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் ஹீராவின் நடிப்பு அபாரமாக இருக்கும்.

அதேபோல் இந்த செக்மெண்டில் வரும் கரண் கதாபாத்திரமும் எதார்த்தத்துடன் அமைந்திருக்கும். அவர் வருவது மிகவும் குறைவான காட்சிகள் என்றாலும் இளைஞர்களின் மனநிலையை அப்படியே பிரபலித்துவிட்டு செல்வார்

எதார்த்த வசனங்கள்

படத்தின் திரைக்கதை எந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறதோ அதுபோல் சில வசனங்கள் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே அமைந்திருக்கும். "விவரம் தெரியாம காதலிக்கலாம், உருவம் தெரியாம காதலிக்க கூடாது", "நான் காதலிப்பேன். அந்த காதல் தோக்கனும்னு கடவுள்கிட்ட வேண்டிப்பேன். அப்போதான் இன்னொரு பெண்ண காதலிக்க முடியும்", "இதயத்தில் ஆரம்பிச்சு கண்களில் முடியறது எங்க காதல்" போன்ற பல எதார்த்த வசனங்களை குறிப்பிடலாம்.

தேவா இசையில் அற்புத பாடல்கள்

படத்தின் பாடல் வரிகளை அகத்தியன் எழுத தேவா இசையமைப்பில் அனைத்து பாடல்களும் ஹிட்டானதுடன், சிறந்த கிளாசிக் பாடல்களாக அமைந்துள்ளன. தொடக்கதில் டைட்டில் கார்டில் ஒலிக்கும் காலமெல்லாம் காதல் வாழ்க, பார்க்காத காதலின் மகத்துவத்தை சொல்லும் நலம் நலமறிய ஆவல், ஹீரோவின் ஒரு தலை காதல் உணர்வை வெளிப்படுத்தும் ஆணழகா உன் அடிமை , ராஜஸ்தான் அழகை காட்டும் சிவப்பு லோலாக்கு குலுங்குது ஆகிய பாடல்கள் அதை காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும் விதமாக இருக்கும்.

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படம் பிலிம்பேர், தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது. தமிழில் இயக்குநருக்கு தேசிய விருது கிடைத்த முதல் படம் இதுதான். காதல் படங்களில் கல்ட் கிளாசிக் படமாக இருக்கும் காதல் கோட்டை வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.