தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar: உறுதியான அஜித்குமார் - பிரசாந்த் நீல் கூட்டணி! முதல் கட்ட பேச்சுவார்த்தை பினிஷ்?

Ajithkumar: உறுதியான அஜித்குமார் - பிரசாந்த் நீல் கூட்டணி! முதல் கட்ட பேச்சுவார்த்தை பினிஷ்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 20, 2024 08:10 PM IST

அஜித்துடன் இணைந்து கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் பணியாற்ற இருப்பது உறுதியாகியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தையும் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய படத்தில் இணையும் அஜித்குமார் - பிரசாந்த் நீல்
புதிய படத்தில் இணையும் அஜித்குமார் - பிரசாந்த் நீல்

உலக அளவில் வசூல் வேட்டை நடத்தி கேஜிஎஃப் பட வெற்றிக்கு பின், அந்த படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் முக்கிய இயக்குநராக உருவெடுத்துள்ளார. அவரது இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான சலார் திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தியது. படத்தில் ஸ்டண்ட் காட்சிகளும், மேக்கிங்கும் வெகுவாக பேசப்பட்டது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு ஹிட்டாக இந்த படம் அமைந்தது.

சலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் அடுத்த படத்தை அஜித்தை வைத்து இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே கேஜிஎஃப் முதல் பாகத்துக்கு பின்னரே பிரசாந்த் நீல் உடன் இணைந்து பணியாற்ற அஜித் விரும்பியதாகவும், கேஜிஎஃப் 2 பணிகளில் அவர் பிஸியாக இருந்ததால் அது நடக்கமுடியாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் பிரசாந்த் நீல் உதவியாளர்கள், அஜித்துடன் தொடர்பிலேயே இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அஜித்துடன் படம் செய்வது குறித்து பிரசாந்த் நீல் தரப்பில் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும், இருவரும் இணைந்து படம் செய்வதை உறுதிபடுத்திகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசாந்த் நீல் கைவசம் கேஜிஎஃப் 3, என்டிஆர் 31, சலார் 2 ஆகிய படங்கள் உள்ளன. ஆனாலும் அஜித்துடன் படம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதால் இதில் எதாவது ஒரு படத்தை அவர் தள்ளி வைக்கலாம் என கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் பெரும் பகுதி காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்படுகிறது. அவ்வப்போது ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியும் வருகிறது.

இந்த படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைக்கா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்த படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

2024 மத்தியில் விடாமுயற்சி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எனவே விடா முயற்சி படத்தின் ரிலீஸ் சமயத்தில் அஜித்தின் அடுத்ததாக பிரசாந்த் நீல், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரில் யார் படத்தில் நடிப்பார் என தெரியவரும். படம் வெளியாவதற்கு முன்னரே இதன் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன்டிவியும் பெருந்தொகைக்கு வாங்கியுள்ளன.

விடாமுயற்சி படத்தில் அஜித் ஸ்டைலிஷ் லுக்கில் தோன்ற இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களில் மூலம் அஜித்தின் லுக் எப்படி இருக்கும் என்பது பற்றி ரசிகர்கள் மிக பெரிய விவாதமே செய்து வருகிறார்கள். அத்துடன் பில்லா, பில்லா 2 பாணியில் அஜித் முழுக்க ஆக்‌ஷனில் மிரட்டுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கேஜிஎஃப் படத்தை தெறிக்கவிடும் விதமாக ஆக்‌ஷன், ஸ்டண்ட் காட்சிகளால் படமாக்கிய பிரசாந்த் நீல், அஜித் காம்போ வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9