‘நான் அவங்கள அளவு கடந்து நேசிக்கிறேன்.. இத்தனை பேர் வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே’ - அஜித்குமார் எமோஷனல் பேட்டி
‘நான் அவர்களை நேசிக்கிறேன்; அளவு கடந்து நேசிக்கிறேன். நடிப்பும் சரி, ரேஸிங்கும் சரி இரண்டிற்கும் நாம் உடல்ரீதியாகவும், எமோஷனல் ரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.’ - அஜித்குமார் எமோஷனல்
துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24H கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் தன்னுடைய அஜித்குமார் ரேஸிங் அணியுடன் பங்கேற்று இருக்கிறார்.இந்த கார் ரேஸானது இன்றைய தினம் தொடங்கிய நிலையில், ரேஸூக்கான ஆடைகள் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு அஜித் வெளியே வந்தார்.
ஆர்ப்பரித்த ரசிகர்கள்
அப்போது அவரை காண வந்திருந்த அஜித் ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அவர்களுக்கு கையசைத்து தன்னுடைய நன்றியை தெரிவித்த அஜித், தொடர்ந்து அங்குள்ள தனியார் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில்,‘நான் உண்மையில் இவ்வளவு ரசிகர்களை எதிர்பார்க்கவில்லை. நான் அவர்களை நேசிக்கிறேன்; அளவு கடந்து நேசிக்கிறேன். நடிப்பும் சரி, ரேஸிங்கும் சரி இரண்டிற்கும் நாம் உடல்ரீதியாகவும், எமோஷனல் ரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
எனக்கு ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை செய்வது பிடிக்காது. அதனால், நான் அதனை செய்யமாட்டேன். நான் ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். இது எல்லா வழிகளிலும் நன்றாக இருக்கிறது. நான் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறேன்.
ஒரு திரைப்படம் ஜனவரியிலும், இன்னொரு திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்திலும் ரிலீஸ் ஆகிறது.இது தொழில்ரீதியான என்னுடைய ரேஸிங்கிற்கு தேவையான நேரத்தைக்கொடுக்கும் என்று நினைக்கிறேன்.’ என்று பேசினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக, இந்தப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்ட போது, அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளானது. நல்விதமாக அவர் எந்தவித காயமின்றி உயிர்பிழைத்தார். இருப்பினும், அடுத்த நாளே மீண்டும் அஜித் பயிற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து ரேஸில் ஈடுபடுவது குறித்து பேசிய அவர், ‘செப்டம்பர் மாதம் வரை கார் ரேஸ் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் ரேஸ் பந்தயம் முடியும் வரை நான் எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டேன்.
ரேஸிங்கில் மட்டும் முழு கவனம்
கார் ரேஸிங் இல்லாத நேரங்களில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் படங்களில் நடிப்பேன். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். ரேஸிலும் முழு கவனம் செலுத்த முடியும். தற்போது விளையாட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். ட்ரைவராக மட்டுமில்லாமல் உரிமையாளராகவும் அதை செய்ய நினைக்கிறேன்.
18 வயதில் கார் பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கினேன். அதன்பின்பு, சினிமாவில் நடித்து வந்ததால் பங்கேற்கவில்லை. 2010ஆம் ஆண்டு யூரோப்பியன் 2 பந்தயத்தில் பங்கேற்க களமிறங்கினேன். ஆனால், பங்கேற்க முடியவில்லை. தற்போது ரேஸிங் தொடருக்கு ஒரு உரிமையாளராக வந்துள்ளேன்." என்றார்.
சினிமா மற்றும் ரேஸிங்கை பேலன்ஸ் செய்கிறேன்
தொடர்ந்து பேசிய அவர், ‘2003-ல் ஃபார்முலா BMW ஆசிய சாம்பியன்ஷிப்பிலும், 2004இல் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 ரேஸிலும் பங்கேற்றேன். ஆனால் இவற்றில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. அதற்கு பிறகு 2010இல் யுரோப்பியன் ஃபார்முலா 2 ரேஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது, அதிலும் சினிமாவில் இருந்த கமிட்மெண்டகளால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. சினிமா, ரேஸ் இரண்டிலும் சமமாக பேலன்ஸ் செய்யவேண்டிய நிலை இருந்தது" என்று கூறினார்.
அஜித்குமார் ரேஸிங் அணி
துபாயில் நடைபெற்று வரும் PORSCHE 992 GT 3 பிரிவிலான கார் ரேஸ் போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றுள்ளது. நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணியில் Fabian duffeiux, mathew deutry, Cam McLeod என மூன்று ஓட்டுனர்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் 5 ரேஸ் போட்டிகளில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. அஜித்குமார் தன்னுடைய அணிக்காக களத்தில் இருக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அடுத்தடுத்து இரண்டு படங்கள்
அஜித்குமார் நடிப்பில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்தின் கதை, பிரபல ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தழுவல் என்பதால், அதை தயாரித்த ஹாலிவுட் நிறுவனம் சார்பில் உரிமை தொகை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 23 ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மிகவும் குறுகிய காலத்தில் அஜித்குமார் நடித்து முடித்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்தடுத்து அஜித்குமார் படங்கள் இந்த ஆண்டில் வெளியாக இருப்பது ரசிகர்களை ஒரு வகையில் குஷிப்படுத்தினாலும், இந்த படங்களுக்கு பின்னர் வரும் அக்டோபர் வரை அடுத்த படத்தில் நடிக்கபோவது இல்லை என்று அஜித்குமாரே சொல்லி இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்