Ajith Kumar: பயிற்சியில் விபத்து.. பிரேக் டவுனாகி நின்ற கார்; தகர்த்தெறிந்த தன்னம்பிக்கை; கப்பை தட்டித்தூக்கிய அஜித்
துபாய் 24 H ரேஸில், அஜித்குமார் அணியானது 991 பிரிவில் 3 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.

துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24H கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் தன்னுடைய அஜித்குமார் ரேஸிங் அணியுடன் பங்கேற்றார். இந்த கார் ரேஸூக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியது. இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து வீரராக விலகுவதாகவும், உரிமையாளராக தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
மூன்றாம் இடம்
24 மணி நேரமாக நடந்த இந்த ரேஸில்,அஜித் அணியின் காரானது பிரேக் டவுனும் ஆனது. இருப்பினும் அஜித் அணியானது இந்த ரேஸில் 3 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஜித்தின் மேனஜரான சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், ‘ அஜித் குமார் அணியானது 991 பிரிவில் 3 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.’ என்று அறிவித்து இருக்கிறார்.
முன்னதாக, நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
நன்றாக படியுங்கள்
அதில் அவர் பேசும் போது, ‘என்னுடைய மோட்டார் மீதான ஆர்வம் சிறுவயதில் ஆரம்பித்து இருந்தது. நிறைய ரசிகர்கள் என்னை தேடி இங்கு வந்திருந்தார்கள். எனக்கு மிகவும் எமோஷனலாக இருந்தது. நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக, மன நிம்மதியோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு நான் அந்த கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்களது குடும்பத்தை பாருங்கள். உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்; நன்றாக படியுங்கள்; உழைக்கிறவர்கள் நன்றாக உழையுங்கள்
கடுமையாக உழையுங்கள்; கடுமையாக விளையாடுங்கள். நாம் நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடும் பொழுது, அதில் ஜெயிப்பது என்பது நல்ல விஷயம் தான். ஒரு வேளை நீங்கள் அதில் ஜெயிக்கவில்லை என்றால், சோர்ந்து போக வேண்டாம் போட்டி என்பது மிக மிக முக்கியம். தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பை என்றுமே விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களை நான் அளவு கடந்து நேசிக்கிறேன்.
கார் ரேஸ் குறித்து
இந்த ரேஸானது பிற போட்டிகள் போல கிடையாது. பிற ரேஸ் போட்டிகளில் ஒரு டிரைவர், ஒரு கார் இருக்கும். ஆனால் இந்த விளையாட்டில், நான்கு பேரும் அந்த போட்டிக்கு பொறுப்பாவர். வாகனத்தை நாம் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்; அதே நேரத்தில் குறைந்த நேரத்திலும் போட்டி போட வேண்டும். இறுதியாக இதற்கும் ஒரு கூட்டு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இதுவும் சினிமா துறையை போலத்தான். அவரவர்கள் அவர்களது கடமையை சரியாக செய்தாலே போதும் ரிசல்ட் தானாக வந்துவிடும். தயவுசெய்து சண்டை போட வேண்டாம். உங்களது குடும்பத்தை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்று பேசினார்.

டாபிக்ஸ்