Ajith and Dhanush: ஏற்கனவே இரண்டு முறை அஜித்துடன் மோதல்.. இப்போ மூன்றாவது தடவை? என்ன செய்ய போகிறார் தனுஷ்
Ajith and Dhanush Clash: 10 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக அஜித் - தனுஷ் ஆகியோர் படங்கள் நேரடியாக மோத இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. அஜித்தின் குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த நாளில் தனுஷின் குபேரா வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், அவர் நடித்து வரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இதனால் விடாமுயற்சி தள்ளி போனதால் துவண்டு போய் இருந்த அஜித் ரசிகர்கள் மீண்டும் குஷி மோடுக்கு வந்துள்ளனர்.
இந்த சூழலில் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது படம் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திடீர் டுவிஸ்டாக தனுஷ் தற்போது நடித்து வரும் குபேரா படம் ஏப்ரல் 10ஆம் வெளியாகும் என தகவல்கள் உலா வருகின்றன. இதனால் அஜித் - தனுஷ் படங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் மோதல்
இதற்கு முன்னதாக கெளதம் மேனன் இயக்கத்தில், அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படம் கடந்த 2015 பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெளியானது. அப்போது தனுஷ் நடித்த பாலிவுட் படமான ஷமிதாப் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியானது. ஷமிதாப் படம் இந்தி படம் என்றாலும் தமிழிலும் டப் செய்யப்பட்டது. இந்த படத்தில் தான் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் ஹரோயினாக அறிமுகமானார். அத்துடன் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாரபாத்திரத்தில் நடித்திருப்பார். பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஆர். பால்கி இயக்கியிருந்த இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.
இந்த இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போதிலும், அஜித்தின் என்னை அறிந்தால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முந்தியது. இந்த ரேஸில் அஜித் வெற்றி பெற்றார். இருப்பினும் தனுஷ் சினிமா கேரியரில் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய முக்கிய படமாக இருந்து வருகிறது.
மாஸ் காட்டிய அஜித்
என்னை அறிந்தால், ஷமிதாப் படங்களுக்கு முன்னரே 21 ஆண்டுகளுக்கு முன் 2004 தீபாவளி ரிலீஸாக அஜித்குமாரின் அட்டகாசம், தனுஷ் நடித்த ட்ரீம்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அட்டாகாசம் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்று வெற்றி படமானது.
துள்ளுவதோ இளம், காதல் கொண்டேன், திருட திருடி என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த தனுஷுக்கு முதல் தோல்வி படமாக ட்ரீம்ஸ் அமைந்தது. இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக முன்னேறியுள்ளார். உலக நாடுகளில் இந்தியாவின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறார்.
ஏற்கனவே இரண்டு முறை அஜித் - தனுஷ் ஆகியோர் மோதிக்கொண்ட நிலையில், தனுஷ் குபேரா படம் ஏப்ரல் 10 ரிலீஸ் உறுதியாகும் பட்சத்தில் தற்போது மூன்றாவது முறையாக இருவரும் மோதவுள்ளதாக பேசப்படுகிறது. இந்த முறையும் அஜித் வெற்றி பெற்றால் இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலில் ஹாட்ரிக் தோல்வி அடையும் நிலைமை தனுஷுக்கு ஏற்படும்.
அதுமட்டுமில்லாமல் தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் தனுஷ் தரப்பில் என்ன முடிவு எடுக்கப்படவுள்ளது என்பது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆக்ஷன் காமெடியாக உருவாகும் குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் குட் பேட் அக்லி படம் ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில்,. யோகி பாபு உள்பட பலரும் நடித்துளஅளார்கள். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த டிசம்பர் மாதமே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
விறுவிறுப்பான கதையாக குபேரா
தனுஷுன் 51வது படமான குபேரா தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்தியிலும் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமா முன்னணி இயக்குநர் சேகர் கம்மூலா படத்தை இயக்குகிறார். தெலுங்கு சினிமாவின் மூத்த ஹீரோ நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தற்போது ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி போயுள்ளது.