22 Years of Raja: அஜித் - வடிவேலு இடையே உரசல் ஏற்படுத்திய படம்! திருப்பத்துடன் கூடிய முக்கோண காதல் கதை
அஜித் - வடிவேலு இடையே உரசல் ஏற்படுத்திய படமாக ராஜா இருந்து வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் திருப்பத்துடன் கூடிய முக்கோண காதல் கதையாக இருந்தாலும், விறுவிறுப்பு இல்லாத திரைக்கதையால் இந்த ரெமான்டிக் டிராமா திரைப்படம் வெற்றியை பெற தவறியது.

பூவெல்லாம் உன் வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்குமார் - ஜோதிகா - இயக்குநர் எழில் கூட்டணி அமைத்த படம் ராஜா. பூவெல்லாம் உன் வாசம் அளவில் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் சராசரி ஹிட்டாக அமைந்து கணிசமான வசூலையும் ஈட்டியது.
காதல் கலந்த குடும்ப படம்
திருமணம் செய்து கொள்ள பிடிக்காத அஜித் வீட்டில் நண்பரின் காதலியாக வந்து தங்குகிறார் ஜோதிகா. பின்னர் சில திருப்பங்களை தொடர்ந்து அஜித் - ஜோதிகாவுக்கு திருமணம் செய்ய அஜித்தின் பெற்றோர் விரும்புகிறார்கள்.
அப்போது பிளாஷ்பேக்கில் அஜித் மீது ஜோதிகா காதல்வயப்படுவதும், அவரை காதலிக்க உதவியாக பிரியங்கா திரிவேதி இருந்ததும் தெரிய வருகிறது. அஜித்தின் தனிப்பட்ட பிரச்னையால் பிரியங்கா திரிவேதி உயிரிழக்க அவரை மறக்க முடியாமல் திருமணத்தை அஜித் தவிர்ப்பதாக தெரிவிக்கிறார். இறுதியில் ஜோதிகா - அஜித் சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை
இந்த ஜோடியின் முந்தைய படமான பூவெல்லாம் உன் வாசம் காதல் கலந்த குடும்ப படமாக அமைந்திருந்தது. ஆனால் ராஜா படம் காதலுடன் கூடிய ஆக்ஷன் படமாக உருவாக்கியிருப்பார் இயக்குநர் எழில்
அஜித் - வடிவேலு இடையே உரசல்
படத்தில் அஜித்தின் மாமா கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான காமெடி ரசிக்கும் விதமாக அமைந்திருந்தது.
படத்தில் அஜித்தின் மாமா என்றதால் வாடா போடா என்று வடிவேலு அவரை உரிமையாக அழைத்து பேசும் விதமாக காட்சிகள் இடம்பிடித்திருக்கும். ஷுட்டிங்குக்கு பின்னரும் அந்த உரிமையை தொடர்ந்த வடிவேலு, அஜித்தை அவ்வாறே அழைக்க இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
வடிவேலு இப்படி அழைப்பதை விரும்பாத அஜித் இதுதொடர்பாக இயக்குநர் எழிலிடம் சொல்ல, அவரும் வடிவேலுவிடம் சொல்லியும் அதை கேட்காமல் அவர் ஒருமையில் அழைப்பதை தொடர்ந்தார். இதனால் வடிவேலுவுடனான காட்சிகளில் வேண்டா வெறுப்பாக நடித்த அஜித், இந்த படத்துக்கு பின்னர் தற்போது வரை அவருடன் இணைந்து நடிக்க வில்லை.
அஜித் - ஜோதிகா இணைந்து நடித்த கடைசி படம்
அதேபோல் முகவரி, பூவெல்லாம் உன் வாசம் படங்களின் வெற்றிக்கு பின்னர் அஜித் - ஜோதிகா ஜோடி மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்தார்கள். இதுவே இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படமாக அமைந்தது.
எஸ்.ஏ. ராஜ்குமார் இசை
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் கரிசகாட்டு பெண்மை, வெத்தலகொடியே, சிங்காரி சிங்காரி பாடல்கள் ஹிட்டாகின. இதில் வெத்தலகொடியே பாடலில் அஜித்துடன் ஜோடியாக நடித்திருந்த முன்னாள் ஹீரோயினான மந்தரா நடனமாடியிருப்பார்.
சராசரி வசூல்
வெற்றி கூட்டணியாக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பையும் வெற்றியையும் பெறவில்லை. மாறாக சராசரியான ஓட்டத்துடன் ஓரளவு வசூலையும் பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்னர் பொங்கல் வெளியீடாக வந்த ரெட் படமும் அஜித்துக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஆனால் இதே ஆண்டில் தீபாவளி வெளியீடாக வந்த வில்லன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியதோடு அஜித்துக்கும் ஹிட் கொடுத்தது.
அஜித் ரசிகர்களால் கூட பெரிய அளவில் ரசிக்கப்படவில்லை என்றாலும் போர் அடிக்காத வகையில் திரைக்கதையுடன் அமைந்திருக்கும் படமாக இருக்கும் ராஜா வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்