பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகள்.. திக்குமுக்காடும் திருவாரூர் விவசாயிகள்.. ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!
ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய செலவு சுமார் ரூ. 50 ஆகிறது என்றும், சேகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கிலோ ஒன்றுக்கு ஊதியம் ரூ. 15 என குறைந்தபட்சம் ஒரு கிலோ பருத்தி பஞ்சின் அடக்க செலவு மட்டும் ரூ. 65 ஆகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளூர் ஏஜெண்ட்டுகளின் நடவடிக்கைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக எதிர்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ‘திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பருத்தி இளம் செடிகளாக இருந்த நிலையில் ஏப்ரல் மே மாதங்களில் இரண்டுமுறை பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டது. எனவே, விவசாயிகள் கூடுதல் செலவு செய்து எஞ்சிய பருத்தியை காப்பாற்றி சாகுபடி செய்துள்ளனர்
கடந்த 15 தினங்களாக பருத்தி பஞ்சு சேகரிப்பு பணிகளை மேற்கொண்டு, பருத்தி பஞ்சு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டு விடப்படுகிறது.