Tamil News  /  Entertainment  /  Adah Sharma Reacts To Her Mobile Number Getting Leaked Says It Reminds Me Of Scene In The Kerala Story
Adah Sharma
Adah Sharma

The Kerala Story: சோசியல் மீடியாவில் கசிந்த ‘தி கேரளா ஸ்டோரி’ நடிகை மொபைல் எண் மற்றும் ஆபாச படங்கள்!-கொதித்த ஆதா ஷர்மா!

26 May 2023, 12:41 ISTKalyani Pandiyan S
26 May 2023, 12:41 IST

இவரது மொபைல் எண்ணானது அண்மையில் சமூகவலைதளங்களில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல்போனதையொட்டிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்தப்படம் உச்சநீதிமன்றம் வரை சென்று பேசு பொருளானது. இந்தப்படத்தில் நடித்த நடிகைகளுள் ஒருவராக நடித்தவர் நடிகை ஆதா ஷர்மா. இவரது மொபைல் எண்ணானது அண்மையில் சமூகவலைதளங்களில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த நம்பரை எடுத்த சிலர் ஆதா ஷர்மாவை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசியிருக்கும் நடிகை ஆதா ஷர்மா, “ சாதாரண பெண்ணின் மொபைல் நம்பரும், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தால் அவள் மனம் என்ன பாடுபடுமோ? அதே போலத்தான் நானும் உணர்கிறேன். இது மிகவும் தாழ்ந்து மகிழ்ச்சி அடையும் அந்த நபரின் வக்கிரமான மனநிலையை காட்டுகிறது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் இதே போன்ற காட்சி ஒன்று வரும்.

அதில் இதே போன்று ஒரு பெண்ணின் போன் நம்பர் பகிரங்கமாக வெளியிடப்படும் போது, அந்தப்பெண் அடையும் கொடுமைகளை இந்தச்சம்பவம் நினைவூட்டுகிறது. என்னுடைய எண்ணை பொதுவெளியில் வெளியிட்ட நபர் பல்வேறு குற்றசம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். என்னுடைய மொபைல் நம்பரை மாற்ற வேண்டும் என்பதே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை சிறையில் அடைக்க நான் கொடுத்த விலையாகும்” என்று பேசியிருக்கிறார். 

 ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கி இருந்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இந்த திரைப்படத்திற்கு மேற்கு வங்க மாநிலம் தடை விதித்தது.

தமிழகத்திலும் இந்தப்படத்தை திரையரங்கங்கள் காட்சிப்படுத்த வில்லை. இதனை எதிர்த்து படக்குழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் படத்திற்கு தடை விதித்த மேற்கு வங்க அரசின் அரசாணையை ரத்து செய்தது. இந்தப்படம் அண்மையில் 200 கோடி வசூல் செய்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்