தனுஷை திட்டிய நயனின் அறிக்கை.. ஸ்ருதி ஹாசன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வரிசைகட்டி வந்து நயன்தாராவுக்கு ஆதரவுதந்த நடிகைகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தனுஷை திட்டிய நயனின் அறிக்கை.. ஸ்ருதி ஹாசன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வரிசைகட்டி வந்து நயன்தாராவுக்கு ஆதரவுதந்த நடிகைகள்

தனுஷை திட்டிய நயனின் அறிக்கை.. ஸ்ருதி ஹாசன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வரிசைகட்டி வந்து நயன்தாராவுக்கு ஆதரவுதந்த நடிகைகள்

Marimuthu M HT Tamil
Nov 16, 2024 06:53 PM IST

தனுஷை திட்டிய நயனின் அறிக்கை.. ஸ்ருதி ஹாசன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வரிசைகட்டி வந்து நயன்தாராவுக்கு ஆதரவுதந்த நடிகைகள் பற்றிப்பார்ப்போம்.

தனுஷை திட்டிய நயனின் அறிக்கை.. ஸ்ருதி ஹாசன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வரிசைகட்டி வந்து நயன்தாராவுக்கு ஆதரவுதந்த நடிகைகள்
தனுஷை திட்டிய நயனின் அறிக்கை.. ஸ்ருதி ஹாசன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை வரிசைகட்டி வந்து நயன்தாராவுக்கு ஆதரவுதந்த நடிகைகள்

இதுதொடர்பாக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், ‘’மதிப்பிற்குரிய திரு. தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன்

வணக்கம். பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை திரு. கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான உங்கள் அண்ணன் திரு. K.செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சினிமா பின்புலம் இல்லாதவள் என சொன்ன நயன்தாரா:

சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன்.

நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம்.

உங்களது பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிப்படைந்தோம்: நயன்தாரா

உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறோம்.

காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம்.

எங்கள் எல்லாப்போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம். 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள்.

முழுக்க என் மீதான தனுஷின் தனிப்பட்ட வெறுப்பு:

ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன்.

ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.

கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன்பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

எனது திரைப்பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கான அனுமதிக்காக வேறு பல தயாரிப்பாளர்களை அணுகியபோது பேரன்போடு அனுமதித்தார்கள்.

அப்போதுதான், உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், காலங்களை கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம். 'நானும் ரௌடிதான்' படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும்.

கடவுள் மன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டியவை:

பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான Copy right காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன.

'நானும் ரௌடிதான்' வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது.

அந்தப் படத்தின் வெற்றி, உங்களை உளவியல்ரீதியாக வெகுவாகப் பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். பின்னர், சினிமா விழாக்களில் (Filmfare 2016) நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளருக்கும் அதனை நன்றாகவே புரிய வைத்தது.

எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது. அநாகரிகமான அந்த செயல்களை செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல், சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்த கடிதத்தின் வாயிலாக வேண்டிக்கொள்கிறேன்.

இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசிர்வாதத்தால், மக்களின் பேரன்பால், சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது.

அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.

“Schadenfreude” என்ற ஜெர்மனிய மொழியைப் பயன்படுத்தி தனுஷை திட்டிய நயன்தாரா:

இந்த நேரத்தில், ஜெர்மனிய மொழியின் “Schadenfreude” எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், அதன் அர்த்தத்தை தெரிந்துக்கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

"மகிழ்வித்து மகிழ்" என்பதே உண்மையான மகிழ்ச்சி. கொண்ட்டாட்டங்கள் நிறைந்த இந்த வாழ்வை எல்லோரும் புன்னகையோடு கடக்க வேண்டும் என்பதையே எனது குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டே 'Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஒருமுறை பார்த்தால், உங்கள் எண்ணங்களும் நேர்மறையாக நிச்சயம் மாறும்.

எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் "spread Love” என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்'' இவ்வாறு நடிகை நயன்தாரா தனுஷ் மீது பகிரங்க குற்றம்சாட்டியிருக்கிறார்.

நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு:

அதற்கு தனுஷுடன் நடித்த நடிகைகள் பலரே, நடிகர் தனுஷுக்கு எதிராகவும், நயன்தாராவின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நயன்தாராவின் பதிவிற்கு லைக்குகளை இட்டு வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் தனுஷுடன் நய்யாண்டி படத்தில் நஸ்ரியா, கொடி படத்தில் நடிகர் தனுஷுடன் நடித்த அனுபாமா பரமேஸ்வரன், 3 படத்தில் தனுஷுடன் நடித்த ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் மரியான் படத்தில் தனுஷுடன் நடித்த பார்வதி, வடசென்னை படத்தில் தனுஷூடன் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர், நடிகை நயன்தாராவின் பதிவினை ஆதரித்து லைக் செய்து வருகின்றனர். தவிர, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, கவுரி கிஷன், ரியா, அஞ்சு குரியன், மஞ்சிமா மோகன், காயத்ரி ஷங்கர் ஆகியோரும் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது பதிவுக்கு லைக் இட்டு வருகின்றனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.