தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Sujithas Brother Suriyakiran Who Played The Young Rajinikanth In The Film Padikathavan Has Passed Away

Suryakiran Passed Away: படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்த சூரியகிரண் காலமானார்!

Marimuthu M HT Tamil
Mar 11, 2024 04:35 PM IST

Suryakiran Passed Away: படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்த மாஸ்டர் சுரேஷ் என்னும் சூரியகிரண் காலமானார்.

Suryakiran Passed Away: படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்த சூரியகிரண் காலமானார்!
Suryakiran Passed Away: படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்த சூரியகிரண் காலமானார்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழில் கல்லுக்குள் ஈரம், படிக்காதவன், மெளனகீதங்கள், கடல் மீன்கள், ரங்கா, டார்லிங் டார்லிங் டார்லிங், நீதியின் மறுபக்கம், மங்கம்மா சபதம், மனிதன், வேலைக்காரன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், மாஸ்டர் சுரேஷ். குறிப்பாக, படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்து, செம ஸ்டைல் காட்டி பிரபலமானவர். இவர் சிறுவயது முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 200க்கும் அதிகமான குழந்தை நட்சத்திர வேடங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். 

குழந்தை நட்சத்திரத்துக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றவர்.

2003ஆம் ஆண்டு, சுமந்த் மற்றும் ஜெனிலியாவை வைத்து சத்யம் என்னும் தெலுங்கு படத்தை இயக்கி, தெலுங்கில் இயக்குநராக அறிமுகம் ஆனார், மாஸ்டர் சுரேஷ். ஆனால், தெலுங்கில் இவர் பெயர் சூரிய கிரண் என ஆனது. அடுத்த ஆண்டு, அதே சுமந்த்தை வைத்து தனா 51 என்னும் படத்தினை தெலுங்கில் இயக்கியிருந்தார். அதன்பின், ஜெகபதி பாபுவை வைத்து, 2006ஆம் ஆண்டு, பிரம்மாஸ்திரம் என்னும் படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மஞ்சு மனோஜ் மற்றும் ஷீலாவை வைத்து, ராஜூ பாய் என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் தெலுங்கில் ஹிட். கடைசியாக சேப்டர் 6 என்ற படத்தையும் எடுத்திருந்தார். சிறந்த இயக்குநராக ஆந்திர மாநில அரசின் நந்தி விருதையும் பெற்றவர்.

அதன்பின் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்பாளராகப் பங்கெடுத்தார்.

இவரது சகோதரி தான், பாண்டியன் ஸ்டோர் சீரியலில், தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதா ஆவார். இவரது தந்தை பெயர் டி.எஸ். மணி, தாயின்பெயர் ராதா. இருவரும் சென்னையில் தங்கி பணிசெய்து கொண்டு இருக்கும்போதுதான், தனது மகன் சுரேஷை நடிப்பதில், சிறுவயது முதலே நடிக்க அனுமதித்துள்ளனர்.

முன்னதாக, இயக்குநர் சூரியகிரணாக தெலுங்கில் பிரபலம் ஆனாலும், பரவலாக தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் மாஸ்டர் சுரேஷ் என்றே அழைக்கப்பட்டார். இவரும் தமிழில் சமுத்திரம் படத்தில் தங்கையாக நடித்த கல்யாணியும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்துவிட்டு, பின் பிரிந்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரது பிரிவு குறித்து கேட்டபோது, தான் பிரிய ஆசைப்படவில்லை என்றும்; தான் இன்னும் கல்யாணியை காதலிப்பதாகவும்; அவர் தான் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார், சூரியகிரண்.

அதன்பின் சில ஆண்டுகள் கழித்து வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டார், சூரியகிரண். இவரது குடும்பம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தது. சென்னைக்கும் அவ்வப்போது வரும் சூரியகிரண், தனது தங்கை சுஜிதாவின் வீட்டில் வந்து தங்கி இருந்து சினிமா பணிகளை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. 

அண்மையில் தமிழில் வரலட்சுமி சரத்குமாரை வைத்து இவர் இயக்கிய அரசி என்னும் திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த சூரிய கிரண், சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று காலமானார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்