Top Cinema News: நடிகை போலீசில் புகார்.. பாடகர் ஜெயச்சந்திரன் மரணம்.. சார்பட்டா அப்டேட்.. இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News Today: டார்ச்சர் செய்த நபர் மீது நடிகை புகார், பழம்பெரும் பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு, சார்பட்டா பட அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
இந்த ஆண்டுகள் பொங்கல் ரிலீஸ் படங்களில் முதல் கட்டமாக கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன் ஆகிய படங்களை நாளை வெளியாக இருக்கின்றன. ரசிகர்கள் இந்த ஆண்டின் புதிய ரிலீஸ்களை காண் ஆர்வமாக இருந்து வரும் நிலையில் இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்
பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு
பழம்பெரும் பின்னணி பாடகரான ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள திருச்சூர் அமலா மருத்துவமனையில் வைத்து அவரது உயிர் பிரிந்தது. மாலை 7 மணியளவில் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 7:54 மணிக்கு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது.
பாடகர் ஜெயச்சந்திரனுக்கு வைரமுத்து இரங்கல்
தென்னிந்திய சினிமாக்களில் சுமார் 16 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகரான ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் மறைந்தார். அவருக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்
பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தியால் கண்கள் நீர்கட்டின 'கொடியிலே மல்லிகைப்பூ' மறக்க முடியுமா? 'தெய்வம் தந்த பூவே' காற்றில் கரையுமா?
'என்மேல்விழுந்த மழைத்துளியே' மண்ணில் மறைந்துபோகுமா? எத்துணை எத்துணை பாடல்கள் அத்துணையும் முத்துக்கள் பழக இனியவர்; பண்பாளர் அவரை நான் ஏழைகளின் ஜேசுதாஸ் என்பேன் அவர் உடல் மறைந்தாலும் குரல் மறையாது 'இன்று எழுதிய என்கவியே இனிமேல் உன்னை எவர் இசைப்பார்' கனத்த மனத்தோடு அஞ்சலியும் ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நிதி அகர்வால் புகார்
தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோயினாக இருப்பவர் நிதி அகர்வால். சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னை மிரட்டுவதாகவும், கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்துவதாகவும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து தன்னை ஒருவர் மிரட்டி வருகிறார். அவர் தன்னையும், குடும்பத்தினரையும் குறிவைத்து தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார். இதன் காரணமாக தான் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறேன். எனவே சம்மந்தப்பட்ட நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
புஷ்பா 2 மேக்கிங் விடியோ வெளியீடு
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை புரிந்திருக்கும் புஷ்பா 2 படத்தின் மேக்கிங் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் என கூடுதலாக 20 நிமிட காட்சிகளுடன் படம் ஓடிடியில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர். படம் தற்போது வரை உலக அளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.
சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் பகிர்ந்த இயக்குநர் பா. ரஞ்சித்
இயக்குநர் பா. ரஞ்சித் தனது தனது துணை இயக்குநர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “சார்பட்டா பரம்பரை 2' படத்தின் இறுதிக் காட்சியை எழுதி முடித்துவிட்டேன். படத்தை எழுதி முடிப்பதுபோல் மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவுமில்லை.
ஏற்கனவே திரைக்கதை ஆசிரியர் தமிழ்ப் பிரபா இதன் திரைக்கதையை ஒரு முறை எழுதிவிட்டார். நான் எனது பாணியில் மீண்டும் ஒருமுறை இதனை எழுதிப் பார்த்தேன். தற்போது ஒரு இடத்தில் வந்து நின்றுள்ளது. எழுதும்போது எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் துணை இயக்குநர் அவருடைய புத்தகத்தை முடித்ததும் அவர் முகத்திலும் இருந்ததைப் பார்த்தேன்” என்றார்.
நடிகை அளித்த புகாரில் தொழிலதிபருக்கு நீதிமன்ற காவல்
மலையாள நடிகை ஹனி ரோஸ் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தொழிலதிபர் பாபி செம்மனூர் என்பவர் மீது புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட கொச்சி போலீசார், பாபி செம்மனூரை கைது செய்தனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாபி செம்மனூருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அமெரிக்காவில் வைத்து புதிய பட ஸ்கிரிப்டை எழுதிய கமல்ஹாசன்
ஏஐ தொழில்நுட்பம் கற்றுக்கொள்வதற்காக அமெரிக்க சென்றுள்ள கமல்ஹாசன் விரைவில் சென்னைக்கு திரும்பவுள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் 237வது படத்தை அன்பறிவு இயக்குகின்றனர். இதையடுத்து அமெரிக்காவில் இருந்தபடியே இயக்குநர்களிடம் பேசிய அவர், கதை எழுதும் பணியை தொடங்கிவிட்டார். இது அதிரடி ஆக்ஷன் கதை என்பதால், மல்டி ஸ்டார் படமாக உருவாக்கப்படுகிறது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது
சீரியல் டிஆர்பியில் டாப் நான்கு இடங்களில் சன் டிவி சீரியல்கள்
இந்த ஆண்டுக்கான முதல் டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியிருக்கும் நிலையில் முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் சிறகிக்க ஆசை 8.87 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த கயல் இந்த வாரம் 10 புள்ளிகளை பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது
ஜி.வி. பிரகாஷ் 25வது படம் டீஸர் வெளியீடு
இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் நடிகராக கலக்கி வருகிறார். இதையடுத்து நடிகராக அவரது 25வது படமாக உருவாகியிருக்கும் கிங்ஸ்டன் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் திவ்ய பாரதி ஹீரோயினாக நடித்துள்ளார். கடல் சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கிங்ஸ்டன் மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தணிக்கை செய்யப்பட்ட விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து படம் தற்போது தணிக்கை செய்யப்பட்டிருக்கும் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாபிக்ஸ்