Nayanthara Dhanush case: நயன்தாரா- தனுஷ் வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.. பரபரப்பில் தமிழ் சினிமா!
நடிகை நயன்தாராவிற்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய நடிகர் தனுஷுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வழக்கின் இறுதி விசாரணையை ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக நெட் பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோருக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர வொண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வேண்டுகோள் படி வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால், தனுஷ் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பிடம் இருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த இந்த வழக்கு வரும் ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
தனுஷ் வக்கீல் நோட்டீஸ்
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
நயன்தாரா அறிக்கை
இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனு தாக்கல்
அந்த மனுவில், மும்பையை சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தனுஷ் மற்றும் நயன்தாரா தரப்புக்கு இடையேயான பிரச்சனை தமிழக அதிகார வரம்புக்குள் நடைபெற்றுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்திலேயே இந்த உரிமையியல் வழக்கு தொடரலாம் என உத்தரவிட்டார்.
வழக்கு தள்ளி வைப்பு
மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்நிலையில் அந்த வழக்கு மீண்டும் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இறுதி விசாரணை தேதி
அப்போது, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 22ம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வரும். இதற்கு மேல் இந்த வழக்கில் கால அவகாசம் கேட்டக் கூடாது என்று கூறியது. அத்துடன் ஜனவரி 22ம் தேதி இடைக்கால மனுக்கள் குறித்த விசாரணையும் நடைபெறும் எனக் கூறியது.
தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கை
முன்னதாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறோம்.
காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.
நஷ்ட ஈடு
டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என நயன்தாரா காட்டமாக பேசியது குறிப்பிடத்தக்கது
டாபிக்ஸ்