தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Lalithakumari Latest Interview About Her Ex Husband Actor Prakash Raj And Divorce

Actress LalithaKumari: நிற்கதியாக நின்னேன்; ‘மம்மி நான் உன் கூட இருக்கேன்னு.. இனி வாழ்க்கை அவங்களுக்காகதான்’-லலிதாகுமாரி

Kalyani Pandiyan S HT Tamil
Mar 23, 2024 06:12 AM IST

என்னுடைய குழந்தைகளோடு நான் இப்போது இல்லையென்றால், அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்ற எண்ணம் வந்தது. மேலும் அவர்களை பார்த்துக்கொள்வது என்பது அது என்னுடைய பொறுப்பு என்று உறுதியாக தோன்றியது.

நடிகை லலிதா குமாரி!
நடிகை லலிதா குமாரி!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ நான் மறுபடியும் திரைக்குறைக்கு ரீ என்ட்ரி ஆன திரைப்படம் முறியடி. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். எப்போதுமே என்னுடைய குழந்தைகளை நான் தான் பள்ளிக்கு அழைத்துச் சென்று, கூட்டி வருவேன். ஆனால் இந்தப்படத்தில் கமிட்டானதால், என்னுடைய நண்பர்கள் என்னுடைய குழந்தை பார்த்துக் கொண்டார்கள். 

அவர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். வீட்டில் ஒரு அக்கா இருந்தார். அவர் அவர்களைப் பார்த்துக் கொள்வார். நான் இங்கிருந்து கோயம்புத்தூருக்கு விமானத்தில் சென்று, அங்கு ஷூட்டிங் முடித்துவிட்டு, பின்பு மீண்டும் சென்னைக்கு வருவேன். இங்கு இரவு குழந்தைகளோடு இருந்து விட்டு பின்னர் மீண்டும் செல்வேன். 

ஆனால் என்னுடைய மனது ஒத்துக் கொள்ளவேவில்லை. காரணம் யாருடைய வீட்டிலோ என்னுடைய குழந்தைகள் தங்கி விட்டு வருகிறதே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இந்த நிலையில்தான் இதுவா..? அதுவா..? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. 

அப்போது, இந்த நடிப்பை நாம் எப்போது வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். ஆனால் என்னுடைய குழந்தைகளோடு நான் இப்போது இல்லையென்றால், அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்ற எண்ணம் வந்தது. மேலும் அவர்களை பார்த்துக்கொள்வது என்பது அது என்னுடைய பொறுப்பு என்று உறுதியாக தோன்றியது. 

காரணம் நான் குழந்தைகளை வளர்க்கிறேன் என்று தான் பெற்றுக் கொண்டேன். என்னடா… நம்முடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று நான் ஏங்கி நிற்கும் பொழுது, நம் கையை பிடித்து, மம்மி நான் உடன் இருக்கிறேன் என்று உறவு நிற்பது என்பது  அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. 

அவள் நினைத்திருந்தால் என்னுடைய கையை விட்டு சென்றிருக்கலாம். என் அம்மாவோடு நான் இருக்க வேண்டும் முடிவு செய்து என்னை பிடித்த அந்த கையை, நான் எக்காலத்திற்கும் விடக்கூடாது என்று முடிவெடுத்தேன். 

நாங்கள் மூன்று பேரும் வெளிநாடுகளுக்குச் சென்று நன்றாக ஊர் சுற்றுவோம். பிடிப்பதை சாப்பிடுவோம். என்னை அவர்கள் நன்றாக கலாய்ப்பார்கள்;அவர்களுக்கும் எனக்கும் இருக்கக்கூடிய அந்த ஒரு உறவு தான் என்னை இன்று இவ்வளவு உறுதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறது” என்று பேசினார். 

முன்னதாக ஒரு பேட்டியில் அவர் பிரகாஷ் உடனான காதல் கதையை பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டி இங்கே!

‘‘பிரகாஷ்ராஜ் முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். அப்போ படங்களில் நடிக்க ஆரம்பிக்கவில்லை. கீதா மேடம் மூலமா பாலசந்தர் சாரை பார்க்க, அப்போ தான் வந்திருந்தார். அப்போ, சாந்திகா கூட நடித்திருந்தார். அப்போது பழக்கமாகி , 3 மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. டூயட் படம் முடிந்ததும், கல்யாணம் பண்ணோம்.

16 வருசம் நன்றாக வாழ்ந்தோம். எங்களுக்குள் சின்ன விரிசல் வந்தது. இரண்டு பேருமே உட்கார்ந்து பேசினோம். எங்களுக்கு முக்கியமா தெரிந்தது, எங்கள் இரண்டு பிள்ளைகள் தான். பூஜா, மேக்னா வாழ்க்கையில் எந்த தொந்தரவும் வந்துவிடக்கூடாது என நான் ரொம்ப யோசித்தேன். அவரும் யோசித்தார்.

அதன் பின் இரண்டு பேரும் பேசி, ஒரு முடிவுக்கு வந்து, விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றுக் கொண்டோம். எல்லாருமே, எங்கள் பிரிவு ஒரு சர்சையாக போகும் என நினைத்தார்கள். மாறி மாறி குற்றசாட்டுகளை வைப்போம் என்று கூட எண்ணினார்கள்.

நான் வாழ்ந்த வாழ்க்கையும், நான் இருந்த நேரங்களும் உண்மையானவை. அதை பிரிந்து வந்த பின் கொச்சைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. அப்படி செய்தால், நான் வாழ்ந்தது நியாயமாகவும் இருக்காது.

நான் வாழ்ந்த 16 வருடத்தில் எத்தனையோ சச்சரவுகள் இருந்திருக்கிறது. அதை தாண்டி தானே வாழ்ந்திருக்கோம். வாழ்க்கையை முடிக்கும் போது, குற்றச்சாட்டுகளை சொல்லி அதை நாமே கொச்சைப்படுத்திவிடக் கூடாது.

சமுதாயத்திற்காக நம் அறிவை உபயோகிக்க கூடாது, நம் குடும்பத்திற்காக உபயோகிக்க வேண்டும். பிரிதல் ரெண்டு வகையாக உள்ளது. ஒன்று, சண்டை போட்டு, காரித்துப்பி சண்டை போட்டு பிரிந்து கொள்ளலாம். இன்னொன்று, அமைதியாக புரிய வைத்து , ஒருவருக்கொருவர் உணர்ந்து அல்லது உணர வைத்து பிரிந்து கொள்ளலாம்.

எங்கள் செய்திகள் பரபரப்பாகி, என் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நாங்கள் பேசிக்கொண்டதே அப்படி தான் பேசிக்கொண்டோம். ‘ஏன் பிடிக்கவில்லை’ என்று கேட்டேன். ‘இல்லை… செட் ஆகாது’ என்று கூறுவார். அவ்வளவு தான்.

அப்பா காலத்தில் இருந்து இருப்பதால், பத்திரிக்கைக்காரர்கள் நிறைய பேர் எனக்கு உதவினார்கள். பிரகாஷ்ராஜ் எங்காவது தப்பி தவறி ஏதாவது பேசியிருந்தால், என்னிடம் போன் பண்ணி கூறுவார்கள். ‘அங்கிள், நான் சேர்ந்து வாழனும்னு நினைக்கீறங்களா? இல்லையா? தயவு செய்து இதையெல்லாம் போடாதீங்க’ என்று கோரிக்கை வைப்பேன். அவர்களும் தவிர்த்துவிடுவார்கள். அவர்களுக்கு நான் நன்றிசொல்ல வேண்டும். ஒரு சின்ன கசிவு கூட ஏற்படாமல் எனக்கு உதவியது செய்தியாளர்கள் தான்.

காம்ப்ரமைஸ் என்பது எப்போதும் ஒரு பக்கம் மட்டும் இருக்க கூடாது, இருவரிடமும் இருக்க வேண்டும். நினைத்ததும் யாரும் பிரிவதில்லை. பசங்களை தனித்து வளர்க்க, என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதற்கே, எனக்கு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘நாம பிரிந்திருக்கலாம், ஆனால் பசங்களுக்கு நாம தான் அம்மா, அப்பா என்பது மாறக்கூடாது’ என்பதை நான் அவரிடம் கூறினேன். அவரும் அதை புரிந்திருந்தார்.

திடீர்னு என் பையனுக்கு ஒரு நாள் வலிப்பு வந்தது. இரவில் அட்மிட் பண்ணேன். காலையில் வந்துவிடுவான் என்று காத்திருக்கிறேன். ஆனால், அவன் இப்போது இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. வலிப்பு வந்து குழந்தைகள் இறப்பார்கள் என்பதே எனக்கு அன்று தான் தெரியும். அவனுக்கு வலிப்பு வரும் அந்த 5 நிமிடத்திற்கு முன்பு வரை, எனக்கு இப்படி ஆகும் என நான் எதையும் நினைக்கவில்லை,’’

என்று அந்த பேட்டியில் லலிதாகுமாரி கூறினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்