Actress Kavitha: மருத்துவமனைக்குள் கோர நாடகம்..கணவன், மகன்.. கொரோனாவில் பறிகொடுத்த சோகம்! - கண்ணீர் வடித்த கவிதா!
கொரோனா காலத்தில் தன்னுடைய கணவர் மற்றும் மகன் உயிரிழந்தது குறித்து நடிகை கவிதா குமுதம் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து குமுதம் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “ அவருக்கு இப்படி ஆகும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. இரண்டு பேருமே உடல்நலம் நன்றாகத்தான் இருந்தது. கொரோனா தொற்று பரவிய சமயத்தில், எங்கள் வீட்டில் பாட்டி, மகன் உட்பட ஏழு பேருக்கும் கொரோனா தொற்றானது உருவானது.
அனைவருமே முறைப்படி உடலுக்கு தேவையான மருந்தை மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்படித்தான் என்னுடைய கணவரும் மருந்து மாத்திரைகளை எடுத்தார். ஆனால் சிகிச்சை பலன் கொடுக்கவில்லை. கூடவே என்னுடைய மகனும் உயிரிழந்து விட்டான். இந்த உலகத்தில் எது இல்லை என்றாலும் நான் இருந்து விடுவேன். ஆனால் அவர் இல்லாமல் என்னால் வாழவே முடியாது.
எனக்கு கடவுள் மீது நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது குடும்பம், குடும்பம் என்று குடும்பத்திற்காகவே நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற இரண்டு நாட்களில் மகன் உயிரிழந்தான். அடுத்த சில நாட்களில் என்னுடைய கணவர் உயிரிழந்து விட்டார்.
என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக அப்போதுதான் நடித்தேன். என் வாழ்க்கையில் நான் நடித்ததே கிடையாது. ஆம், கேமராவை விட்டு நான் வெளியே வந்தவுடன், எனக்கு பிடித்தவாறு நான் சிரித்துக் கொண்டே இருப்பேன். குழந்தை முதலில் இறந்தது அவருக்கு தெரியாது. அவரை நான் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில் அவருக்கு நாங்கள் குழந்தை இறந்ததை சொல்ல வில்லை. அவர் மகனை பற்றி பேசும் போது, அவர் குழந்தையை பற்றி கேட்கும் போது, அவர் நன்றாக இருக்கிறான். விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று பொய்களைச் சொல்லி நடித்துக் கொண்டிருந்தேன்.
அவர் இருக்கும் அறையை விட்டு வெளியே வந்தவுடன் கதறி கதறி அழுதேன். அந்த சமயத்தில் தான் நான் முதன் முறையாக வாழ்க்கையில் நடித்தேன். நான் கல்நெஞ்சகாரி. அதனால் தான் என்னுடைய இருதயமானது இன்னும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய இரண்டு குழந்தைகள். ஆம், எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. இதற்கிடையே நான் மூன்று முறை தற்கொலை செய்ய முயன்றேன். என் வீட்டில் அருகில் இருந்த அம்மாதான் என்னை பளார் என்று அறைந்து, தற்கொலைக்கான கவுன்சிலிங் எல்லாம் கொடுத்து என்னை மாற்றினார்கள்” என்று பேசினார்.

டாபிக்ஸ்