Honey Rose: ' தொடர் மிரட்டல் வருது.. தற்கொலை செஞ்சுகலாம் போல இருக்கு..' வேதனையில் ஹனி ரோஸ்
Honey Rose: எனக்கு தொடர் மிரட்டல் வருகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் போலத் தோன்றுகிறது என நடிகை ஹனி ரோஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

Honey Rose: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ஹனி ரோஸ். இவர், தெலுங்கு நடிகர் பாலைய்யாவின் வீரசிம்ம ரெட்டி படத்தில் மிகவும் கிளாமராக நடித்ததன் மூலம் இந்திய மக்களிடம் நன்கு பரிட்சையமானார்.
தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு
இவர் கேரளாவில் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற போது, தன்னை மிக இழிவாகவும், இரட்டை அர்த்த வசனம் பேசி பெண்களை மோசமாக சித்தரித்ததாகவும் தொழிலதிபர் போபி செம்மணூர் மீது குற்றம் சாட்டினார்.
இதையடுத்து ஹனி ரோஸ் தொழிலதிபர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர் போபி செம்மணூரை கைது செய்தனர்.
மன உளைச்சல்
இந்நிலையில், போபி செம்மணூரின் கைது சம்பவத்தால் கோவமடைந்த ராகுல் ஈஸ்வர் என்ற நபர் தொடர்ந்து தன்னையும் தன் குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார் என ஹனி ரோஸ் மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பதிவில், " நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அதற்கு ராகுல் ஈஸ்வர், நீங்கள்தான் முக்கிய காரணம். பொது மேடையில் என் மீது கூறப்பட்ட வெளிப்படையான அவதூறுக்கு எதிராக நான் புகார் அளித்தேன். காவல்துறை என் புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்து, நான் புகார் அளித்த நபரை நீதிமன்றக் காவலில் வைத்தது.
புகார் அளிப்பது தான் என் வேலை
புகார் கொடுப்பது மட்டுமே என் வேலை. மீதமுள்ளது அரசு, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தைச் சார்ந்தது. என் புகாரின் தீவிரத்தைத் திரித்து, பொதுமக்கள் முன்னிலையில் கோகுல் ஈஸ்வர் என் ஒழுக்கத்தை இழிவுபடுத்துகிறார்.
நான் தொடர்ந்து எதிர்கொள்ளும் மிரட்டல்களுக்குப் பின்னால் ராகுல் ஈஸ்வர் முக்கிய காரணமாகவும் இருக்கிறார். இதில் என்னையும் என் தொழிலையும் குறிவைத்து ஆபாசமான, இரட்டை அர்த்தமுள்ள கருத்துகளும் அடங்கும்.
தற்கொலைக்கு தள்ளியது
அவரது செயல்கள் என்னைத் தொடர்ந்து கடுமையான மன வேதனையில் தள்ளியது. தற்கொலை எண்ணங்களுக்குக்கூட என்னைத் தூண்டியுள்ளன. இந்தச் செயல்கள் ஒரு பெண்ணாக என் கண்ணியத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்டவை” என்று கூறியிருந்தார்.
மேலும், “ராகுல் ஈஸ்வர் நேரடியாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் எனக்குத் தீங்கு விளைவிப்பதாகவும், என் பெண்மையை அவமதிப்பதாகவும் மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுத்து என் தொழில் வாய்ப்புகளையும் சீர்குழைக்க முயற்சித்துள்ளார். அவரது செயல்களை கருத்தில் கொண்டு, நான் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் விளக்கம்
முன்னதாக, தொழிலதிபர் போபி செம்மணூர் இதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளார். தான் ஹனி ரோஸிடம் எந்த தவறான எண்ணமும் கொண்டிருக்கவில்லை. அவரை வேறு எண்ணத்துடன் தான் அணுகவும் இல்லை என்றார்.
கடைத் திறப்பு விழாவிற்கு வருவோருக்கு கையை பிடித்து வளையல் போடுவதும், கழுத்தில் செயின் போடுவதும் எள்லாம் புதிதல்ல. அவர் இதைப் பற்றி என்னிடமே பேசி இருக்கலாம். ஆனால் ஏன் போலீஸ் வரை சென்றார் எனத் தெரியவில்லை எனக் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்