4 ஏக்கரில் இயற்கை விவசாயம்.. நன்றி மறவாத தேவயானி.. முகவரி கொடுத்த இயக்குநர் வீட்டுக்கு விசிட்
தமிழ் சினிமாவில் தனக்கு முகவரி கொடுத்த இயக்குநரான அகத்தியன் பூர்வீக வீட்டுக்கு விசிட் அடித்துள்ளார் நடிகை தேவயானி. திரைப்படங்களில் நடிப்பதுடன் கணவர் ராஜகுமாரனுடன் இணைந்து இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சினிமாவில் இருந்து சின்னத்திரை பக்கம் திரும்பிய கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து சினிமா, சின்னத்திரை என நடிப்பில் கவனம் செலுத்தி வரும் தேவயானி, தமிழ் சினிமாவில் தனக்கு திருப்புமுனை தந்த இயக்குநர் அகத்தியனை நெகிழ வைத்துள்ளார்.
பூர்வீக வீடு விசிட்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிக்கு புதிய உணவகம் திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார் நடிகை தேவயானி. அப்போது தமிழ் சினிமாவில் தனக்கு முதல் வெற்றியை பெற்றுகொடுத்த காதல் கோட்டை பட இயக்குநர் அகத்தியன் சொந்த் ஊர் பேராவூரணி என்ற அறிந்து வியப்படைந்தார்.
பின்னர் அவரது பூர்வீக வீடு இங்கு இருப்பதை அறிந்து கொண்ட தேவயானி, அவரது வீட்டுக்கு விசிட் அடித்துள்ளார். அங்கிருந்த இயக்குநர் அகத்தியனின் சகோதரியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
நன்றி மறாவாத நடிகை
தேவயானியின் இந்த விசிட் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலான நிவையில், இயக்குநர் அகத்தியன் இதுபற்றி பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் நன்றி மறாவாத நடிகையாக தேவயானி உள்ளார். அவர் எனது மகளை போன்றவர் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தேவயானி
மும்பையை சேர்ந்த நடிகை தேவயானி பெங்காலி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் மலையாளம், இந்தி சினிமாக்களில் நடித்த இவர் அதியமான் இயக்கிய தொட்டா சிணுங்கி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
இதன் பின்னர் அகத்தியன் இயக்கத்தில் அஜித்குமாருடன் இவர் இணைந்த நடித்த காதல் கோட்டை, தமிழ் சினிமாவில் சிறந்த காதல் காவியமானது. தமிழ் சினிமாவில் ஹோம்லியான நடிகை என பெயரெடுத்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தபோது இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்துடன் தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் ஏராளமான படங்களில் நடித்தார்.
அதேபோல், தமிழில் மிகுந்த வரவேற்பை பெற்ற டிவி சீரியலான கோலங்கள் என்ற தொடரில் கதையின் நாயகியாக நடித்த ரசிகர்களின் மனதில் குடி புகுந்தார். கடைசியாக தமிழில் தேவயானி நடிப்பில் எழுபின், கள்வனின் மாப்பிள்ளை ஆகிய படங்கள் 2018இல் வெளியாகின. இதைத்தொடர்ந்து ஜெனி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதை பெற்றிருக்கும் தேவயானிக்கு இரு மகள்கள் உள்ளார்கள்.
இயற்கை விவசாயம்
சினிமாவில் நடிப்பது தவிர கணவர் ராஜகுமாருடன் இணைந்து இயற்கை விவசாயமும் செய்து வருகிறார் நடிகை தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலம் என்கிற கிராமத்தில் 4 ஏக்கரில் தென்னை மரம் தோப்பு வைத்திருப்பதுடன், பல்வேறு பயிர்கள், மரங்களையும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.
சுவர் ஏறி குறித்து திருமணம்
திருமணமாகி, தாயான பின்பும் நடிப்பை தொடர்ந்து வரும் தேவயானி, "எங்கள் காதல் வீட்டுக்கு தெரிய வந்ததும் எதிர்ப்பும் கிளம்பியது. வேறு வழியில்லாமல் சுவர் ஏறி குதித்து போய் ராஜகுமாரனை திருமணம் செய்தேன். அதுவரைக்கும் எங்க வீட்டில் என்ன சொன்னாலும் கேட்டு விடுவேன். ஒரு விஷயம் கூட அம்மா அப்பாவுக்கு எதிராக செய்தது கிடையாது. ஆனால் காதல் விஷயம் வேறு மாதிரியாக இருந்ததால் வீட்டில் சம்மதிக்கவில்லை.
நமது தலையெழுத்தில் எப்படி எழுதி இருக்கிறதோ அதுபோல்தான் எல்லாமே நடக்கும். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் சரி என்று சொன்ன என்னுடைய பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. ஆனால் நான் தைரியமாக முடிவெடுத்தேன். அதற்கு கடவுள் தான் காரணம்.
ராஜகுமாரனை திருமணம் செய்த பிறகு இயக்குநர் விக்ரமன் பல்வேறு உதவிகளை செய்தார். அந்த நேரத்தில் பல செய்தி சேனல்களும் எங்களிடம் பேட்டி எடுக்க ஆர்வமாக இருந்தாங்க. அதுபோல போலீஸில் எங்கள் மீது புகார் இருந்ததால் ஏகப்பட்ட நெருக்கடியில் இருந்தோம். அந்த நேரத்தில் எங்களுக்கு பணரீதியாகவும், மன ரீதியாகவும் ஆதரவு கொடுத்தார்" என்று தனது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.