‘தனியா வர்றேன்னு சொன்னா எடை போடுறாங்க.. நாங்கல்லாம் உடை மாத்த எங்க போனோம்.. கேரவன் தேவையில்லாத விஷயம்..’ - ஷோபனா!
‘தயாரிப்பு நிறுவனம் அதில் சந்தோஷமாக இருந்தாலும், சில சமயங்களில் அங்கு என்னை எடை போடுகிறார்கள். அதுதான் இங்கு பிரச்சினை’ - ஷோபனா!
கேரவன் கலாச்சாரம் குறித்து பிரபல நடிகையான ஷோபனா பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
கேரவன் தேவையில்லாத செலவு
இது குறித்து அவர் பேசும் போது, ‘என்னைப் பொறுத்தவரை கேரவன் என்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையில்லாத செலவு. முன்பெல்லாம் எங்களுக்கு கேரவனே கிடையாது. ஆகையால் உடை மாற்ற வேண்டும் அல்லது வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று இருந்தால், மறைவதற்கு சரியான இடம் இருக்கிறதா என்று பார்ப்போம்.
உடை மாற்றுவதற்கு கேரவனா?
சில சமயங்களில் உடை மாற்றுவதற்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில், வீடு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தயார் செய்து வைத்திருப்பதாக கூறுவார்கள். ஆனால் இங்கு இருந்து அங்கு வரை பயணம் செய்து, அந்த இடத்தில் உடைகளை மாற்றிக் கொண்டு வருவது என்பது சிரமம். ஆகையால், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மறைவான இடத்தில் நாங்கள் எங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொள்வோம். அப்படித்தான் நாங்கள் இருந்தோம். நான் மட்டுமல்ல, நான் நடித்த காலத்தில் நடித்த அனைத்து நடிகைகளும் அப்படித்தான் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
எவ்வளவு முக்கியம்
கேரவனில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் நீங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பொழுது, அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு தடைபட்டு விடும். ஆனால் நீங்கள் வெளியே இருந்தால், இதர நடிகர்கள் பேசக்கூடிய வசனங்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். அது நமக்கு நம்முடைய கேரக்டரை இன்னும் நன்றாக செய்வதற்கு உதவும்.
கேரவன் என்பது தற்போது ஒரு அந்தஸ்தை நிர்ணயிப்பது போன்று ஆகிவிட்டது. எடுத்துக்காட்டாக நான் ஒரு ஹிந்தி படம் செய்தேன். அது மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம். அவர்கள் என்னிடம் உங்களுடன் எவ்வளவு பேர் பயணிப்பார்கள் என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்று கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் அப்படியே ஷாக் ஆகி விட்டார்கள். தயாரிப்பு நிறுவனம் அதில் சந்தோஷமாக இருந்தாலும், சில சமயங்களில் அங்கு என்னை எடை போடுகிறார்கள். அதுதான் இங்கு பிரச்சினை’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்