Chemmeen Sheela: ஒரே நேரத்தில் 4 படங்கள்.. பன்முக நாயகி.. கொடி கட்டிப் பறந்த நடிகை செம்மீன் ஷீலா
Actress Chemmeen Sheela: நடிகை ஷீலா 20 ஆண்டுகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, உருது என பல்வேறு மொழிகளில் 475-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர்,பிரேம் நசீர், சத்தியம், மது, சுகுமாரன், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிக்கும் பல பிரபலங்கள் நடிப்புத் திறமை மட்டுமல்லாது பல வகையான திறமைகளுடன் இருப்பார்கள். உதாரணமாக நடிகர் அஜித்குமார் துப்பாக்கிச் சுடுதல், கார் ரேசிங், பைக் ரேசிங் போன்றவற்றில் கைதேர்ந்தவர்.
அதுபோல ஒரு பெண்ணாக 1960, 70களில் பன்முகத் திறமை கொண்ட நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷீலா. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ரயில்வே அலுவலருக்குப் மகளாக பிறந்தவர் இவர்.
அதனால் இவர் பயணிக்காத இடமே கிடையாது. ரயில்வே அலுவலரின் மகள் என்பதால் பணிக்காக அவர் தந்தை இடமாற்றம் அடையும் இடமெல்லாம் இவரும் சேர்ந்து பயணித்தார். திருச்சூர் மட்டுமல்லாது திருச்சி, சேலம், கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களில் தனது படிப்பை முடித்தார்.
தமிழ் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனால் நாடகத்தில் அறிமுகமானார். பின்னர் எம்ஜிஆர் மூலம் பாசம் திரைப்படத்தின் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு வயது 13 தான். அதன் பின்னர் பாக்ய ஜாதகம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.
பின்னர் அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, உருது என பல்வேறு மொழிகளில் 475-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். எம்ஜிஆர்,பிரேம் நசீர், சத்தியம், மது, சுகுமாரன், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவரும் நடிகர் மதுவும் இணைந்து நடித்து வெளியான செம்மீன் திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய புகழைப் பெற்றது. அந்தப் படத்திற்குப் பிறகு இவர் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்பட்டார்.
மம்முட்டி நடித்து வெளியான ஒன்னு சிரிக்கி என்ற திரைப்படத்திற்குக் கதை மற்றும் திரைக்கதை இவர் எழுதியுள்ளார். நடிகர் பிரேம் நசீருடன் அதிக எண்ணிக்கையில் இவர் சேர்ந்து நடித்த காரணத்தினால் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.
ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு மிகவும் பிசியாக இருக்கக்கூடிய நடிகையாக இருந்துள்ளார். ஒரே நேரத்தில் நான்கு கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த நான்கு திரைப்படங்களும் ஒரே இடத்தில் நடந்திருக்கின்றது. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இரண்டு மணி நேரம் இடைவேளை என ஒதுக்கி அனைத்து படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இப்போது இருக்கக்கூடிய இவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் சந்திரமுகி திரைப்படத்தில் நாசருக்கு அக்காவாக நடித்திருப்பார். தற்போதும் ஒரு எளிமையான கிராமத்து கதாபாத்திரம் கிடைத்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
கின்னஸ் சாதனை தொடங்கி தேசிய விருது, மாநில அரசு விருது எனப் பல விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர், ஓவியர் எனப் பன்முக திறமை கொண்டவராக இருந்து வருகிறார்.
சிறந்த ஓவியரான இவர் எர்ணாகுளத்தில் உள்ள லீ-மெரிடியன் ஹோட்டலில் ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினார். அதில் இவரது 93 ஓவியங்கள் விற்கப்பட்டன. ஓவியங்கள் விற்கப்பட்டுக் கிடைத்த பணத்தைச் சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கினார்.
ஷீலாவிற்காக அவரது ரசிகர்கள் ஷீலா ரசிகர்கள் சங்கம் என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். ஒரு நடிகைக்காகக் கேரளாவில் ரசிகர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும். அந்த பெருமையும் இவரையே சேரும். இன்று பிறந்த நாள் காணும் இவரும் நமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.

டாபிக்ஸ்