தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை! ஆந்திர சட்டப்பேரவை அமைச்சர்! நடிகை ரோஜா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
அரசியலில் சாதித்த நடிகைகள் என எண்ணிப்பார்த்தால் வெகு சிலரே அடங்குவர். அதில் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒருவர் தான் ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் ரோஜா, இவர் இன்று 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சினிமாவில் இருந்து அரசியலில் வந்து பெரும் பெயரையும், புகழையும் பெறுபவர்கள் இந்திய சினிமாத்துறையில் அதிகம் பேர் உள்ளனர். தற்போது வரை அரசியல் மீதான சினிமா நடிகர்களுக்கான ஈர்ப்பு குறைந்த பாடில்லை. ஏனென்றால் இந்த இரு பெரும் துறைகளும் பொது மக்களை நேரடியாக சந்திக்கும் களமாகும். இந்த இரு வேறு துறையிலும் ஒருவர் ஜொலிக்க வேண்டும் என்றால் வெகுஜன மக்களின் ஆதரவை பெற வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்தவர்களில் எம். ஜி.ஆர் முதல் என். டி.ஆர் என வந்து தற்கால நடிகர்களும் அரசியலில் குதித்து வருகின்றனர். இருப்பினும் அரசியலில் சாதித்த நடிகைகள் என எண்ணிப்பார்த்தால் வெகு சிலரே அடங்குவர். அதில் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒருவர் தான் ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் ரோஜா, இவர் இன்று 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
செம்பருத்தியாக வந்த ரோஜா
ரோஜா திருப்பதியில் 1972 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்ரீலதா என்பதாகும். சிறு வயது முதலே அரசியலில் நாட்டம் கொண்ட ரோஜா தனது பட்டப்படிப்பை அரசியல் பாடத்திலேயே படித்து முடித்தார். மேலும் தனது தந்தையின் ஆசைப்படி நடிகையாகவும் தீர்மானித்தார். முதன் முதலில் தெலுங்கில் 1991 ஆம் ஆண்டு “பிரேம தப்பாசு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தின் இயக்குநர் செல்வமணியை பின்னாளில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ரோஜாவின் நேர்த்தியான முகம், அழகான சிரிப்பு என தமிழ் ரசிகர்களின் மனதை எளிமையாக ஆட்கொண்டு விட்டார் ரோஜா. அதன் பின்னர் உழைப்பாளி, மக்கள் ஆட்சி, சூரியன், பரம்பரை என அன்றைய தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார்.
அம்மன் அவதாரம்
2000 ஆம் ஆண்டு வெளி வந்த பொட்டு அம்மன் படத்தில் ரோஜா அற்புதமான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். அதில் சில காட்சிகளில் அம்மன் அலங்காரத்திலும் இருப்பார். அதனைத் தொடர்ந்து கோட்டை மாரியம்மன், அங்காள பரமேஷ்வரி என அம்மன் அவதாரத்தை தொடர்ந்தார். 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரியும் அம்மன் என்றால் கண் முன் வருவது அம்மன் வேடம் போட்ட நடிகைகள் தான் என்று. அதில் ரோஜாவுக்கும் இடம் உண்டு. அகன்ற கண்கள், அன்பான முகம் என அம்மனிற்கு தேவையான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருப்பார் ரோஜா.
அரசியல் பிரவேசம்
தந்தையின் விருப்பதை நிறைவேற்றிய ரோஜா தனது விருப்பமான அரசியலில் நுழைய ஆசை பட்டார். அவர் முதன் முதலாக 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு சரியான மரியாதை கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த கட்சியிலும் அவருக்கு சரிபட்டு வர வில்லை. இறுதியாக ஓய்.எஸ். ஜெகன் தொடங்கிய ஓய்.எஸ். காங்கிரசில் சேர்ந்தார். இந்த கட்சியில் இருந்தே இவரது அதிரடியான அரசியல் பயணம் தொடங்கியது.
2014 ஆம் ஆண்டு ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் நாகரி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக களம் இறங்கினார்.அவரது துணிச்சலான பேச்சு, துடிப்பான செயல் என பலவற்றிற்கு பெருமையாக பேசப்பட்டார். அடுத்த 2019 ஆம் ஆண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும் ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆக உருவெடுத்தார். தற்போது நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த போதும் உற்சாகத்துடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது அரசியலுக்கான ரோல் மாடல் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா என்று தான் தெரிவிப்பார்.
அரசியலில் அதிக ஈடுபாடு இருந்த போதும் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறார். இவரது பிறந்தநாளை ஒட்டி பலரும் இவருக்கு வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக நடிகை ரோஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
டாபிக்ஸ்