Actress Jayalakshmi: பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி திடீர் கைது! ஏன் தெரியுமா?-actress and bjp executive jayalakshmi arrested on fraud complaint - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Jayalakshmi: பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி திடீர் கைது! ஏன் தெரியுமா?

Actress Jayalakshmi: பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி திடீர் கைது! ஏன் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Feb 20, 2024 03:57 PM IST

’சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்து இருந்தார்’

நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது
நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது

பாடலாசிரியர் சினேகன், "சினேகம் அறக்கட்டளை" என்ற பெயரில் சேவை அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சினேகம் அறக்கட்டளையின் பெயரை சொல்லி பொது மக்களிடம் பணம் வசூலித்ததாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்தார்.

பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரின் பேரில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தம் மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்து தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியாக கூறி பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமியும் புகாரளித்தார். இதனடிப்படையில் சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் மனு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. சினேகன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆஜராகி, தனது "சினேகம் பவுண்டேஷன்" என்ற பெயரை ஜெயலட்சுமி தான் தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாகவும், சினேகன் மீது பொய்யாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது என்றும் வாதிட்டார். இதனையடுத்து சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செயப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணி முதல் சென்னை அண்ணா நகர் திருமங்கலம் வெல்கம் காலனி பகுதியில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் நீதிமன்ற அனுமதி உடன் திருமங்கலம் காவல் உதவி ஆணையர் வரதராஜன், ஆய்வாளர் சிபுகுமார் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.