எதிர்பாராத ட்விஸ்ட்.. ஷங்கருக்கு போட்டியாக களமிறங்கிய மகள்.. பொங்கல் ரேஸில் வரிசை கட்டும் படங்களின் லிஸ்ட்
விடாமுயற்சி விலகலுக்கு பிறகு பொங்கல் ரிலீஸை டார்கெட் செய்து பல படங்கள் வரிசை கட்டி வருகின்றன. இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துடன் அவரது மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கும் படமும், பல முறை தள்ளிப்போன விஷாலின் மதகஜராஜா படமும் 13 ஆண்டுகளுக்கு பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது.
அஜித்குமாரின் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிபோன நிலையில், ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை படம் பொங்கல் வெளியீடாக வரப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதைபோல் மேலும் சில படங்களும் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
பாலா இயக்கத்தில் உருவாகி பலமுறை தள்ளிப்போன வணங்கான் படத்தையும் பொங்கலுக்கு வெளியிடவுள்ளனர். விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்திருக்கும் படை வீரன் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் புதிதாக மற்றொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமும் தற்போது இணைந்துள்ளது.
முரளி மகன் ஆகாஷ் முரளி அறிமுகம்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் படம் நேசிப்பாயா. இந்த படம் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
இதையடுத்து இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வரும் என போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நேசிப்பாயா படமும் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வருவதாக இருந்து, கடைசி நேரத்தில் பின் வாங்கியிருக்கும் நிலையில் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள படங்கள் தற்போது களமிறங்குகின்றன.
ஆக்ஷன், த்ரில்லர், பேமிலி ட்ராமா, காமெடி என பல்வேறு ஜானர்களில் படங்கள் வர இருக்கும் நிலையில் ரொமாண்டிக் பாணியில் உருவாகியிருக்கும் காதலிக்க நேரமில்லை படத்துடன் மற்றொரு காதல் படமாக நேசிப்பாயா இணைந்துள்ளது. இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.
ஷங்கருடன் போட்டி போடும் மகள் அதிதி
இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக இயக்கியிருக்கும் நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் ஜனவரி 10ஆம் தேதி சங்கராந்தி (பொங்கல்) ரிலீஸாக வெளியாகிறது. இந்த படம் தமிழ், இந்தி உள்பட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வருகிறது.
இதையடுத்து தற்போது ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கும் நேசிப்பாயா படமும் அடுத்த நான்கு நாள்களில் ரிலீஸ் ஆக இருப்பதால் தந்தை - மகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. கேம் சேஞ்சர் படத்துடன் ஒப்பிடுகையில், நேசிப்பாயா சிறிய பட்ஜெட் படம் என்றாலும் ஷங்கர், அதிதி ஆகியோரில் யார் பாஸ் ஆகி ரேஸில் ஜெயிக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
13 ஆண்டுகள் கழித்து வரவிருக்கும் மதகஜராஜா
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் நடிப்பால் பக்கா ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி 2013 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படம் மதகஜராஜா. ஆனால் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், நீண்ட நாள்களாக பெட்டிக்குள் முடங்கியது. இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்த்திராத நிலையில் சர்ப்ரைஸாக இந்த படம் தற்போது ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஷேன் நிகம், கலையரசன், நிகரிகா கோனிடேலா, ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்து வாலி மோகன் தாஸ் இயக்கியிருக்கும் மெட்ராஸ்காரன் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்கலுக்கு வரும் பிற படங்களின் லிஸ்ட்
மேற்கூறிய படங்கள் தவிர மரிச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் சுமோ, கிஷன் தாஸ் - ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் தருணம், சிபிராஜ் நடித்திருக்கும் டென் ஹவர்ஸ் ஆகிய படங்களும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது வரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள படங்களும், அதன் வெளியீட்டு தேதியும் பின்வருமாறு
- கேம் சேஞ்சர் - ஜனவரி 10
- வணங்கான் - ஜனவரி 10
- மெட்ராஸ்காரன் - ஜனவரி 10
- மதகதராஜா - ஜனவரி 12
- காதலிக்க நேரமில்லை - ஜனவரி 14
- நேசிப்பாயா - ஜனவரி 14