கொரோனா தடுப்பூசிதான் காரணமா? - ‘விவேக் ஏன் இறந்தார் என்று எங்களுக்கு தெரியவில்லை’ - மனைவி ஓப்பன் டாக்
அந்த சமயத்தில் அவர் வெளியூருக்கெல்லாம் ஷூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. விமானத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற விதிமுறையும் அமலில் இருந்தது. - அருள்செல்வி!
காமெடி நடிகரான விவேக் கொரோனா ஊரடங்கு காலத்தில், எல்லோரையும் போல தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால், அடுத்த நாளே அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதைச் சுற்றி பல கதைகள் உலாவின. இந்த நிலையில் இது குறித்து அவரது மனைவி அருள்செல்வி அண்மையில் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசினார்.
அவர் பேசும் போது, ‘அந்த சமயத்தில் மக்கள் மிகவும் ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். புதுசு புதுசாக ஏதோவெல்லாம் தடுப்பூசி வருகிறது. அதை போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். விவேக் சாருக்கும் அந்த குழப்பம் இருந்தது. அவரும் நிறைய பேரிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை கேட்டார்.
கட்டாயம் இருந்தது
அந்த சமயத்தில் அவர் வெளியூருக்கெல்லாம் ஷூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. விமானத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற விதிமுறையும் அமலில் இருந்தது. இரண்டு முறை தடுப்பூசி போடலாம் என்று சென்று, அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
அதன் பின்னர் மூன்றாவது முறையாக அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பொழுது மீடியாவை அழைத்து அவர்கள் முன்னர்தான் போட்டுக் கொண்டார். காரணம் என்னவென்றால், விவேக் சார் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அதைப் பார்த்து, பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்பது தான்.
அடுத்த நாள் அவர் இறந்து விட்டார். அவர் இறந்ததற்கான காரணம் என்ன என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை. காரணம் என்னவென்றால், அவர் உடலை பார்த்துக் கொள்வது போல யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது. ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது கூட, அவர் வீட்டை சுற்றி இருக்கும் நகரில் வாக்கிங் செல்வார். வீட்டு மாடியில் ஜிம் இருக்கிறது; அதில் உடற்பயிற்சி மேற்கொள்வார்.
யோகா செய்வார். இப்படி உடலை பார்த்துக் கொண்டவர் எப்படி இப்படியான ஒரு இறப்பை சந்திக்க முடியும் என்ற குழப்பம் எங்களுக்கு வந்தது. அவர் இறந்ததையடுத்து பல பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள பயந்தார்கள். காலம் செல்ல, செல்ல எல்லோருமே தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். ஆனால், எல்லோருமே இறக்கவில்லை. ஆகையால் அவர் இறப்புக்கு தடுப்பூசியைதான் காரணம் என்று நாம் சொல்ல முடியாது” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்