நடிகர் விஷாலை சுற்றி அடிக்கும் வழக்குகள்.. லைகா, நடிகர் சங்கம் என அடுத்தடுத்து வந்த சிக்கல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகர் விஷாலை சுற்றி அடிக்கும் வழக்குகள்.. லைகா, நடிகர் சங்கம் என அடுத்தடுத்து வந்த சிக்கல்..

நடிகர் விஷாலை சுற்றி அடிக்கும் வழக்குகள்.. லைகா, நடிகர் சங்கம் என அடுத்தடுத்து வந்த சிக்கல்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 05, 2025 02:33 PM IST

நடிகர் விஷால் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது, லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகை என அடுத்தடுத்த வழக்குகளில் சிக்கியுள்ளார்.

நடிகர் விஷாலை சுற்றி அடிக்கும் வழக்குகள்.. லைகா, நடிகர் சங்கம் என அடுத்தடுத்து வந்த சிக்கல்..
நடிகர் விஷாலை சுற்றி அடிக்கும் வழக்குகள்.. லைகா, நடிகர் சங்கம் என அடுத்தடுத்து வந்த சிக்கல்..

விஷால்- லைகா விவகாரம்

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த சமயத்தில், தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மீறப்பட்ட ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.

நேரில் ஆஜரான விஷால்

பின்னர், இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பணத்தை செலுத்தாததாலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததாலும், நேரில் ஆஜராக விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அவரும் நேரில் ஆஜரானார். அவருக்கு உயர் நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்திருந்தது.

விஷால் சொத்து விவரம்

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்தார். 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள், தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார்.

விஷாலுக்கு தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா இன்று ஜூன் 5 ஆம் தீர்ப்பளித்தார். அதில், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார். அத்துடன் வழக்குச் செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.

நடிகர் சங்க பதவி காலம் நீட்டிப்பு

முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 -ம் ஆண்டு தேர்தல் நடத்தபட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கட்டடப் பணிகள் பாதிக்க கூடாது

இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கபட்டு 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால், சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பொதுக்குழுவில் பேசி நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

விதி மீறல் இல்லை

ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, பதவி கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டது.

எனவே, இந்த வழக்கு உள்நோக்கத்துடனும் தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருதரப்பின் விரிவான வாதத்திற்காக வழக்கை 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.