Vinayakan Apology: கையாள முடியாத பிரச்னை! ஆடை ஆவிழ்ந்தது கூட தெரியாமல் போதையில் ரகளை.. ஜெயிலர் பட வில்லன் மன்னிப்பு
Actor Vinayakan Apology: மதுபோதையில் ஆடை ஆவிழ்ந்தது கூட தெரியாமல் ரகளை செய்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன், தனது மோசமான செயலுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மலையாள சினிமாக்களில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் விநாயகன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வர்மண் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு இவரது வில்லத்தனமான நடிப்பும் முக்கிய பங்கு வகித்தது.
குடிபோதையால் சர்ச்சையில் சிக்கிய விநாயகன்
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் விநாயகன், தனது வீட்டின் பால்கனியில் அரை நிர்வாணமாக நின்றபடி போஸ் கொடுத்தவாறு அருகில் உள்ள வீட்டுக்காரர்களை ஆபாசமாகத் திட்டும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
விநாயகன் செய்த இந்த காரியத்துக்கு யாரும் அவர் மீது புகார் கொடுக்கவில்லை. இதனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்ட விநாயகன்
இதைத்தொடர்ந்து தனது இந்த அநாகரிமான செயலுக்கு நடிகர் விநாயகன் மன்னிப்போ கோரியுள்ளார். "ஒரு நடிகராக, தனி நபராக என்னால் கையாள முடியாத பல பிரச்னைகள் உள்ளன. எனது செயலுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்மறை விஷயங்கள் என என்னை சுற்றிய எல்லா பிரச்னைக்கு மன்னிப்பு கேட்கிறேன்" என சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விநாயகனின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, மது பழக்கம் ஒரு திறமை மிக்கவரை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்று கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
விநாயகனை துரத்தும் சர்ச்சைகள்
மலையாளத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விநாயகன். மலையாளத்தில் வெளியான கம்மாட்டிபாடம் என்ற படத்துக்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருது, பிலிம் பேர் விருதுகளை வென்றார்.
தமிழில் விஷாலின் திமிரு படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் சிம்புவுடன் சிலம்பாட்டம், காளை, கார்த்தியுடன் சிறுத்தை, தனுஷ் உடன் மரியான் போன்ற படங்களில் நடித்தார். சுமார் 10 ஆண்டு இடைவெளிக்கு பின் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமிழில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். விக்ரமுடன் இணைந்து துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.
இதையடுத்து திரை வாழ்க்கையில் சிறந்த நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் விநாயகன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக அவரை பல்வேறு சர்ச்சைகள் பின் தொடர்ந்து வருகின்றன. மீடூ விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, "நான் வாழ்க்கையில் 10 பெண்களுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டு இருக்கிறேன். பெண்கள் அனுமதியுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது மீடூ குற்றத்தில் வராது" என்று விநாயகன் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த உம்மன் சாண்டி குறித்து பேஸ்புக் லைவ் விடியோவில் மோசமான கருத்தை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் விநாயகனுக்கு கடும் கண்டனங்கள் குவிந்ததோடு, அவருக்கு மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.
அதேபோல், கடந்த ஆண்டில் விமான நிலைய அதிகாரிகளுடன் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். அதன்பின் தேநீர் கடை ஒன்றில் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் விநாயகன் திட்டிய விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

தொடர்புடையை செய்திகள்