விக்ரமின் சூப்பர் படம்.. 25 ஆண்டுக்கு பின் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ- ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விக்ரமின் சூப்பர் படம்.. 25 ஆண்டுக்கு பின் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ- ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்ரமின் சூப்பர் படம்.. 25 ஆண்டுக்கு பின் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ- ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 23, 2025 11:15 AM IST

நடிகர் விக்ரமை சீயான் விக்ரமாக மாற்றிய படமாகவும், அவரது சினிமா கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாகவும் சேது இருந்து வருகிறது. இந்த படம் வெளியாகி 25வது ஆண்டு ஆக இருப்பதை முன்னிட்டும் டிஜிட்டலில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்ட ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

விக்ரமின் சூப்பர் படம்.. 25 ஆண்டுக்கு பின் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ- ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விக்ரமின் சூப்பர் படம்.. 25 ஆண்டுக்கு பின் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ- ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காதலும், சோகமும் கலந்த பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தின் மூலம் பாலா இயக்குநராக அறிமுகமானார். விக்ரமின் மாறுபட்ட நடிப்பு, இளையாராஜா இசை, பாலாவின் எதார்த்த திரைக்கதை போன்றவை படம் மிக பெரிய வெற்றியை பெற காரணமாக இருந்தது. படம் ரிலீஸுக்கு பின் பெரிதாக வரவேற்பை பெறாத போதிலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் ரசிகர்களின் கருத்தால் பிக்கப் அப் ஆகி சூப்பர் ஹிட்டானது.

சேது ரீ-ரிலீஸ்

இதையடுத்து இந்த படத்தை டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டரிங் செய்து ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, சேது படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் நிறைவடையும். எனவே படத்தின் 25வது ஆண்டு கொண்ட்டாட்டமாக முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டில் ரிலீசான ஐ படத்துக்கு பின்னர் விக்ரமுக்கு பெரிய ஹிட் எதுவும் அமைந்திடாத நிலையில், சேது ரீ-ரிலீஸ் குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தடைகளை சந்தித்த சேது

மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவியாளரான பாலா, தனது நண்பர்களுக்கு நேர்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சேது கதையை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து விக்னேஷ், முரளி போன்ற நடிகர்கள் ஹீராவாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்த பின்னர் விக்ரம் ஹீரோவானார்.

அதேபோல் ஹீரோயினாக முதலில் கீர்த்தி ரெட்டி நடிப்பதாக இருக்க, பின்னர் அபிதா கமிட்டானார். 1997இல் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு ஃபெப்சி ஸ்டிரைக் காரணமாக இரண்டு ஆண்டுகள் வரை தடைப்பட்டது. இதன் பின்னர் தயாரிப்பாளர் பட தயாரிப்பில் இருந்த விலக, இயக்குநர் பாலா மற்றும் அவரது இணை இயக்குநராக இருந்த அமீர் ஆகியோரின் முயற்சியால் படம் மீண்டும் தொடங்கப்பட்டது.

படம் தயாரான பிறகு சுமார் 60க்கும் மேற்பட்ட திரையிடலுக்கு பின்னரும் விநியோகஸ்தர்கள் வாங்க முன் வரவில்லை. சோகம் மிக்க க்ளைமாக்ஸ் காரணமாக படத்தை வாங்கிய திரையிட விநியோகஸ்தர்கள் பலரும் தயக்கம் காட்டினார். இருப்பினும் பல்வேறு தடங்கலுக்கு பிறகு ரிலீசான படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 100 நாள்களுக்கும் மேல் ஓடி வெற்றியை பெற்றது.

ட்ரெண்ட் உருவாக்கிய சேது

அத்துடன் சிறந்த தமிழ் படம் தேசிய விருது, சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு மற்றும் ஃபிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது என விருதுகளை குவித்த சேது தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

சேது படத்துக்கு பின்னர் தமிழ் சினிமாவில் எதார்த்தம் மற்றும் நேட்டிவிட்டியை வைத்து படங்கள் தயாராகும் ட்ரெண்ட் உருவானது.