The GOAT: விஜய்யின் 'தி கோட்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்.. போஸ்டருடன் புதிய அப்டேட்டை பகிர்ந்த படக்குழு ..!
The GOAT Censor Update: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதனை சுருக்கமாக 'தி கோட்' என்று அழைக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யு/ஏ சான்றிதழ்
இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
தணிக்கை வாரியத்தால் ஏ சான்றிதழ் தவிர்க்கப்பட்டுள்ளதால், பட குழுவினரும் விஜய் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
முதன்முறையாக விஜயுடன் இணைந்த வெங்கட் பிரபு
'தி கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் விஜய் இணைந்து உள்ளார்.
இரண்டு வேடங்களில் விஜய்
மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் தளபதி விஜய் நடித்துள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர், அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது உடல் அமைப்பு, தோற்றம், அசைவுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்தார். 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருப்பது ஆகும்.
பிரமாண்ட பொருட்செலவில் தி கோட்
இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றி இருக்கிறார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவர் இணைந்து இருக்கிறார். இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான வகையில்'தி கோட்' உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கோட் ட்ரெய்லர்
சமீபத்தில் வெளிவந்த தி கோட் படத்தின் ட்ரெய்லர் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளதால் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லர் 43 மில்லியனுக்கும் அதிகமான பார்வையை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
கலவையான விமர்சனங்கள்
இந்தப்படத்தில் இருந்து முன்னதாக டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் படத்தில் இருந்து வெளியான விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் உள்ளிட்ட பாடல்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இன்னும் குறிப்பாக அண்மையில் வெளியான ஸ்பார்க் பாடலில் விஜயின் தோற்றமும், யுவனின் இசையும் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளானது.