Goat Movie Update: ’கோட் திரைப்பட ஏ.ஐ. விவகாரம்!’ விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற விஜய்!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நன்றியும் தெரிவித்தார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஏ.ஐ படத்தை பயன்படுத்தியதற்கு அனுமதி தந்ததற்காக பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பின் போது கோட் திரைப்பட இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோரும் உடன் இருந்தனர்.
கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
GOAT திரைப்படம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25 ஆவது திரைப்படமும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாகவும் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இதனை சுருக்கமாக கோட் என்று அழைக்கிறார்கள்.
வெங்கட் பிரபு உடன் முதன்முறையாக இணைந்த விஜய்
'கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் விஜய் இணைந்து உள்ளார்.
இந்த திரைப்படத்தில் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஏஐ உருவம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக படப்பிடிப்பின் போதே தகவல்கள் வெளியாகி இருந்தது.
எதிர்ப்பு தெரிவித்து இருந்த பிரேமலதா!
இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு இருந்த அறிக்கையில், இந்நிலையில் ஏஐ (AI TECHNOLOGY) தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டனை திரைப்படங்களில் பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும் என விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. குறிப்பாக இது போன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றன. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை யாரும் அனுமதி பெறவில்லை
எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் ( AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இது வரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்.’’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிரேமலதா விஜயகாந்த் உடன் விஜய் சந்திப்பு!
இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நன்றியும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
டாபிக்ஸ்