10 Years Of Jilla: விஜய் - மோகன்லால் பாசப் போராட்டம் ‘ஜில்லா’.. வெளியான நாள் இன்று!!
விஜய் - மோகன்லால் கூட்டணியில் உருவான ஜில்லா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்களை நிறைவு செய்து 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை துவங்கிய விஜய், 1992 ஆம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலான திரைவாழ்க்கையில் கிட்டதட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ளாா்.
இன்றைக்கு கோலிவுட்டின் தளபதி என ரசிகா்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகா் விஜய்யின் பல படங்கள் முத்திரை பதித்துள்ளன. பல படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. வெற்றியை கொண்டாடியும், தோல்வியில் இருந்து தேவையானவற்றை கற்றுக்கொண்டும் அவரது பயணம் தொடா்கிறது.
அந்தவகையில், விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'ஜில்லா'. இப்படத்தை ஆர்.டி. நேசன் இயக்கியிருந்தார். இப்படத்தில் காஜல் அகர்வால், தம்பி ராமையா, பூர்ணிமா பாக்கியராஜ், மகத், நிவேதா தாமஸ், சம்பத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்தாா்.
ரௌடி வளர்ப்பு மகன் போலீஸாக மாறி, ரௌடி அப்பாவைத் திருத்துவது போன்ற கதையை மையமாக வைத்து 'ஜில்லா'வை உருவாக்கி இருந்தாா் இயக்குநர் நேசன். விஜய் மார்டன் உடைகளில் வருவார். மோகன்லால் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார்.
கம்பீர ரௌடி சிவனாக மோகன்லாலின் அசத்தல் நடிப்பு கவனம் ஈர்த்தது. வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருந்தது. இருவருமே ஆட்டம் போட்டு அசத்தி இருப்பாா்கள்.
நரைத்த தாடி, அகல பாடி எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் வசீகரிக்கிறார். ஒரு குற்றச்செயலின் போது குழந்தைகள் நிறைய பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விஜய் குற்றச்செயல்களுக்கு எதிராக திரும்புகிறார். மோகன்லாலை குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது என்கிறார். அதனால் இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. இறுதியில் விஜய் மோகன்லாலுடன் இணைந்தாரா? எப்படி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விஜய் அழிக்கிறார் என்பதை இயக்குநர் நேசன் விறுவிறுப்பாக சொல்லி இருந்தாா். அதான் 'ஜில்லா' வின் கதை.
ஜில்லா 2014 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்களை நிறைவு செய்து 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு இதே ஜனவாி 10 ஆம் தேதி ரலீஸாகியது 'ஜில்லா'. பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.