Actor Vijay: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. களம் தயரா? - நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்திய நடிகர் விஜய்!
நடிகர் விஜய் இன்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கூட்டணியை தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா? என அரசியல் பார்வையாளர்கள் இடையே விவாதங்கள் ஒருபுறம் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே, அதிமுகவும், திமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுக்களை அமைத்து முதல்கட்ட பணிகளை துவங்கியுள்ளன. இந்த சூழலில் நடிகர் விஜய் இன்று (ஜன.25) தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அடுத்த பனையூரில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி மாவட்ட தலைவர்களின் கருத்துக்களை விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கினர். பல இடங்களில் கணிசமாக வெற்றிகளை பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகளாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கினர்.
அதன்பின்னர் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு நடிகர் விஜய், கல்வி உதவி தொகை வழங்கினார். மற்றும் அவர் பிறந்த நாளன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டு வரும் சூழலில் கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்தகட்ட அரசியல் குறித்து பனையூர் அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும். மேலும் தரம் தாழ்ந்து ஆபாசமாக கருத்துகளை பதிவிட கூடாது. நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தலைமை வெளியிடும் பதிவுகளுக்கான லைக் மற்றும் ஷேர் மில்லியனை தாண்ட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் மற்றும் ஷேர் செய்யக் கூடாது என்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருந்தார்.
டாபிக்ஸ்