அதிர்ச்சி.. ஸ்மார்ட் கம்பங்கள் தேவை.. எல்லா இடத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. விஜய் கருத்தால் பரபரப்பு
அதிர்ச்சி.. ஸ்மார்ட் கம்பங்கள் தேவை.. எல்லா இடத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. விஜய் கருத்தால் பரபரப்பு உருவாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமைக்கு ஆளான செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும்; அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும் - விஜய்
ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.
இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்''எனத் தெரிவித்திருக்கிறார், நடிகர் விஜய்.
உச்ச நடிகர் கட்சி ஆரம்பித்த கதை:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.
இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான ‘தளபதி மக்கள் இயக்கம்’ அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவளிக்கவும் இல்லை. அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து களப்பணியாற்றிய விஜய்:
அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடந்தது.
அதில் பேசிய விஜய் திராவிடமும் தமிழ்த்தேசியமும் தனது இரு கண்கள் என்றும், பிறப்பால் அனைவரும் சமம் எனவும், நம்முடன் பங்கு சேரும் கூட்டணி கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் எனவும், இறை நம்பிக்கைக்கு எதிரானவர்கள் தாங்கள் அல்ல என்றும் தெரிவித்தார். த.வெ.க தலைவர் விஜய்யின் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியது.
டாபிக்ஸ்