Actor Vidharth: ‘13 வருசமாச்சு.. 2 நாளா சிகிச்சையில் இருந்தேன்..’ நடிகர் விதார்த் உருக்கம்!
‘இப்படியான ஒரு ஆவல் தான், எனக்கு 13 ஆண்டுகளாக இருந்தது. இன்று தான் அது நடந்திருக்கிறது’
இறுகப்பற்று திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்த படக்குழுவினர் சார்பில், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நடிகர் விதார்த், உணர்வுபூர்வமாக பேசினார். இதோ அவருடைய பேச்சு:
‘‘13 வருடமாகிவிட்டது எனக்கு, மைனா ரிலீஸ் ஆன பின், படம் வெற்றியான பின், பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம். அணியாக அந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்டது சந்தோசமாக இருந்தது. அதுக்கு அப்புறம் குரங்கு பொம்மை படம் ரிலீஸ் ஆகி போகும் போது, அதை ப்ரமோட் பண்ண மீட் பண்ணோம். அந்த படத்தின் தயாரிப்பாளரே உட்காரந்து, ‘எங்கள் படம் வெற்றி அடைந்து விட்டது, சந்தோசமாக இருக்கிறது’ என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்திட்டு இருந்தேன்.
ஒவ்வொரு படம் பண்ணும் போதும், அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது நடக்கவே இல்லை. அது தான் உண்மை. நல்ல படமாக தான் இருந்ததே தவிர, கொஞ்சம் பேர் பார்ப்பாங்க, நல்லா இருக்கு என்று சொல்வார்களே தவிர, அது பெருவாரியான மக்களிடம் போய் சேரவில்லை.
இன்று ஒரு வெற்றி படத்தில், நானும் அங்கமா இருக்கேன். அதை அந்த படத்தின் தயாரிப்பாளரே இங்கு வந்து சொல்லும் போது, ஆனந்தமாக இருக்கிறது. இப்படியான ஒரு ஆவல் தான், எனக்கு 13 ஆண்டுகளாக இருந்தது. இன்று தான் அது நடந்திருக்கிறது. இப்படி ஒரு படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி.
பத்திரிக்கையாளர்களின் விமர்சனமும், ரொம்ப நல்ல விதமாக மக்களிடம் போய் சேர்ந்தது. ஆடியன்ஸூம் படம் பார்த்துவிட்டு, சமூக வலைதளத்தில் அவர்கள் ஷேர் செய்த விசயங்கள் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்தது. இந்த 6 நாட்களில் என்னுடைய போனுக்கு அவ்வளவு அழைப்புகள் வந்தது. ஒவ்வொருத்தரும் படம் பார்த்து பகிர்ந்தவற்றை, இயக்குனர் யுவராஜூடம் கூற வேண்டும் என்று தான் தோன்றியது.
‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க.. இப்படி பண்ணுங்க’ என்று தான் இதற்கு முன் சொல்லுவார்கள். இந்த படம் மட்டும் தான், என்னை மட்டுமின்றி, 6 கதாபாத்திரங்களையும், சின்ன சின்ன கதாபாத்திரம் முதற்கொண்டு அனைவரையும் பாராட்டினார்கள்.
‘நீங்க எங்கள் வீட்டு பிள்ளை மாதிரி நீங்க’ என்று ஒருத்தர் அனுப்பியிருந்தார். எனக்கு அதைப் பார்க்கும் போது, எப்படி என்னை அப்படி கனெக்ட் செய்தார் என்று தெரியவில்லை. சிலர் ஸ்லோவா இருக்கு என்று சொன்னாலும், மக்கள் படத்தோடு பயங்கரமா கனெக்ட் ஆகிவிட்டார்கள்.
சந்தோசமா ஆகிவிட்டால், அமைதியாகிவிடுவோமோ என்று தெரியவில்லை. அடுத்த படத்திற்காக இரு நாட்களாக ஆயுர்வேத சிகிச்சையில் இருந்தேன். இந்த நிகழ்ச்சி என்றதும், ‘இதுக்காக தானே காத்திட்டு இருந்தேன்’ என்று கோவையிலிருந்து புறப்பட்டு வந்தேன். இந்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள நிறைய வைத்திருந்தேன், வந்ததும் எதுவும் தோன்றவில்லை, இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் என்னுடைய நன்றி,’’ என்று நடிகர் விதார்த் உருக்கமாக கூறினார்.
டாபிக்ஸ்