Actor Vidharth: ‘சர்ச்சையை உருவாக்குவது எனது நோக்கமல்ல.. நீட் தேர்வால எவ்வளவு வலி’ - விதார்த்
Actor vidharth: நான் படங்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக கதையை மட்டும் தான் பார்க்கிறேன். அந்தவகையில் ‘அஞ்சாமை’ படம் சிலர் சொல்லுவது போல வைரலாக, ஒரு சர்ச்சையை உருவாக்கும் கதையா என்றால் சர்ச்சையை உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. - விதார்த்
Actor Vidharth: கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார் நடிகர் விதார்த். தற்போது ஜூன்-7ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அஞ்சாமை’ படத்திலும் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருப்பதை அந்தப்படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளிப்படுத்துகின்றன.
நீட் தேர்வை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம்
அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு தந்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப்படத்தை வெளியிடுவதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. விதார்த்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். நீட் தேர்வை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
படம் குறித்து நாயகன் விதார்த் கூறும்போது, “நான் படங்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக கதையை மட்டும் தான் பார்க்கிறேன். அந்தவகையில் ‘அஞ்சாமை’ படம் சிலர் சொல்லுவது போல வைரலாக, ஒரு சர்ச்சையை உருவாக்கும் கதையா என்றால் சர்ச்சையை உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. படம் வெளியாகும்போது அது உங்களுக்கே தெரியும்.
எந்த ஒரு விஷயத்தையும் ஜோடனையாகவோ அல்லது அதிகப்படுத்தியோ சொல்லாமல், இந்தப்படம் உண்மையை பேசி உள்ளது என்று நம்புகிறேன். நீட் தேர்வுக்கு ஆதரவா, எதிர்ப்பா என்கிற விஷயத்திற்குள்ளேயே நாங்கள் போகவில்லை. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் நடைபெற்ற சமயத்தில், எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விடுவேன்.
25 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்:
அந்தவகையில் கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். மக்களுடைய மனநிலையை, மக்களின் வலியை சொல்லும் விதமாக இந்தப்படம் உண்மையை பேசி இருக்கிறது என்று தான் நான் புரிந்து கொண்டேன். சும்மா சொல்லக்கூடது, நடிகை வாணி போஜனை இந்த படம் வேற லெவலுக்கு கொண்டு செல்லும். இதற்குப் பிறகு அவர் என்ன பண்ணப் போகிறார் என எதிர்பார்க்க வைக்கும் விதமாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
என்னுடைய மகள் ஏழாவது படிக்கிறாள். புத்தகத்தை மட்டும் தலையில் வைத்துக்கொள் என்று அவளை கட்டாயப்படுத்துவதில்லை. நடனமோ, இசையோ எது பிடித்திருக்கிறதோ அதற்கு அவள் விரும்பியபடி செல்கிறாள். இன்று இருக்கும் குழந்தைகள் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தான் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
அவர்களை ஆதரித்தால் போதும்
அவர்களை ஆதரித்தால் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன். நான் நடிகனாக விரும்பியதை எனது பெற்றோர் ஆதரித்ததால் தானே இந்த இடத்தில் நான் இருக்கிறேன்? ஒவ்வொரு நாளும் என் மகள் பேசும் விஷயங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். என் மகளிடம் நான் ஏதாவது சொல்வதை விட, இன்றுவரை அவளிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா என்று தான் பார்க்கிறேன்.
குழந்தைகள் அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை படிக்கிறார்கள். நாம் தான் அவர்களின் ரிசல்ட்டை நோக்கி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அவர்களது கல்வி குறித்து இப்படி முடிவு எடுத்திருக்கலாமோ, அப்படி முடிவு எடுத்திருக்கலாமோ என்றெல்லாம் குழப்பிக் கொள்ள தேவையில்லை. சந்தோசமாக வாழ்க்கையை அனுபவித்து போய்க்கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய வேலை நடிப்பது மட்டும்தான். என் படங்களும்,எல்லா படங்களும் ஓட வேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி ஓடினால் தான் என்னை இயக்க இருக்கும் அத்தனை பேர்களுக்கும் தங்களது கதையை படமாக்க வாய்ப்பு கிடைக்கும்” விதார்த் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்