Vadivelu:கமல்ஹாசனின் டைரக்ஷனில் ஸ்டாலினின் ‘மிசா’.. வடிவேலுவின் அதிரடி அப்டேட்!
கமல்ஹாசன் டைரக்ஷனில் ஸ்டாலினின் ‘மிசா’ வாழ்க்கை திரைப்படமாக இருந்ததாக நடிகர் வடிவேலு தெரிவித்து இருக்கிறார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வருட வாழ்க்கையை தற்போதைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் விதமாக அவர் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியானது கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த வகையில் மதுரையில் இன்று காலை புகைப்படகண்காட்சி துவங்கப்பட்டது. மதுரையில் இருந்து நத்தம் செல்லக்கூடிய பாதையில் 2,3 ஏக்கர் பரப்பளவில் இந்த புகைப்படகண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புகைப்பட கண்காட்சியை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியுடன் இணைந்து நடிகர் வடிவேல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்வரின் அரிய புகைப்படங்களை பார்த்த அவர் வியப்படைந்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய வடிவேலு, “ இந்த புத்தக கண்காட்சியை நாட்டில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோருக்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்து இருக்கிறது. ஜெயலலிதா உட்பட எல்லா தலைவர்களுடனும் ஸ்டாலின் இருந்த புகைப்படங்கள் அனைத்தும் இங்கு இருக்கின்றன.
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும். இங்கு இருக்கும் அனைத்தும் நமக்கு ஒரு பாடமாக இருக்கும். என்னை இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க அழைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இதில் அவர் சிறைச்சாலையில் இருப்பது போன்ற புகைப்படம் இருக்கிறது. அது சம்பந்தமான புத்தகமும் கூட இருக்கிறது.
அதனை உதயநிதி ஸ்டாலின் படமாக எடுக்க அதை கமல்ஹாசன் டைரக்ஷன் செய்வதாக இருந்தது. அதற்கு மிசா என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அந்தப்படம் எடுக்கப்படுவதாக இருந்த நிலையில் மாமன்னன் படத்தோடு அவர் சினிமா வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக அறிவித்து விட்டார்.