Pushpa 2: பாகிஸ்தான்காரர்கள் கையால் நடு இரவில் கிடைத்த உணவு.. புஷ்பாவிற்கு நன்றி.. நெகிழ்ந்த சுனில்
Pushpa 2: புஷ்பா படத்தின் மூலம் கிடைத்த அடையாளம் தான் பசியோடு சுற்றிய எனக்கு பாகிஸ்தானியர்கள் கையால் உணவு சமைத்து கொடுக்க வைத்தது என நடிகர் சுனில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Pushpa 2: புஷ்பா 2: தி ரூல் படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார், புஷ்பா படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மேலும், புஷ்பா: தி ரைஸ் மற்றும் புஷ்பா 2: தி ரூல் படங்களில் மங்களம் சீனு எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த சுனில், புஷ்பா படத்தால் தான் அடைந்த பெருமைகல் குறித்தும் பேசினார். அந்த விழாவில் பேசிய சுனில், ஸ்பெயின் நாட்டில் பாகிஸ்தானியர்களால் அவர் எவ்வாறு அடையாளம் காணப்பட்டார் என்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
ஸ்பெயினில் உணவுக்காக அலைந்தோம்
அப்போது பேசிய சுனில், "நான் ஆதிக் ரவீச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றேன். அங்கு இருந்தபோது, ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு உணவு தேடி நானும் ஆதிக் ரவிச் சந்திரனும் அலைந்தோம். அங்கு 10 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்படும். அதனால் அதற்கு முன்னதாக 9:45 மணிக்கு ஒரு பெட்ரோல் பங்குக்கு ஓடிச் சென்று சில சிற்றுண்டிகளை வாங்கினோம். ஆனால் எங்களுக்கு பசி அடங்காததால் வேறு கடை ஏதாவது இருக்கிறதா என பார்க்கச் சென்றோம்.
பாகிஸ்தானியர்களால் அடையாளம் காணப்பட்ட சுனில்
“அருகில் திறந்திருக்கும் உணவகங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு கபாப் கடைக்கு வந்தோம். அந்தக் கடை மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கடையை சேர்ந்தவர்கள் வெளியே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை இந்தியர்கள் என்று தான் நினைத்தோம்.
அப்போது அங்கிருந்த ஒருவர் என்னைப் பார்த்து, புஷ்பா இடைவேளை காட்சியில் என்னைப் பார்த்ததாகவும் உங்களை அடையாளம் கண்டு கொண்டதாகவும் கூறினார். இருப்பினும் அதனை உறுதிபடுத்திக் கொள்ள அவர் தனது போனில் அந்தக் காட்சியை மீண்டும் பார்த்ததாக கூறினார்.
எனக்காக உணவு சமைத்தனர்
இதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். பின் அவர்களிடம் பேசிய போது தான் தெரிந்தது அந்தக் கடையின் உரிமையாளர்கள் பாகிஸ்தானியர்கள் என்று. பின் அவர்கள் உணவகம் மூடப்பட்டிருந்தாலும் எங்களுக்காக சமைத்துக் கொடுத்தார்கள். இந்தப் படம் அத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ளது. நான் எங்கு சென்றாலும் புஷ்பா படத்தின் மூலம் அடையாளம் காணப்படுகிறேன்” என்று சுனில் பெருமையாக கூறினார்.
புஷ்பா 2: தி ரூல் பற்றி
Pushpa 2: The Rule டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் 2021 ஆம் ஆண்டு வெளியான வெற்றிப் படமான புஷ்பா: தி ரைஸின் தொடர்ச்சி. ஒரு கூலித் தொழிலாளியாக இருந்து செம்மரக் கடத்தல் தொழிலின் தலைவனாக உயரும் புஷ்ப ராஜின் கதையை இது கூறுகிறது. நடிகர் சுனில் இந்தப் படத்தில் மங்களம் சீனு எனும் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இந்தப் படத்தில் ரஷ்மிகா மந்தனா மற்றும் பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்