Soori: நான் பொய் சொல்லனும்னு வந்தேன்… இது திருப்பி அடிக்காத பாட்ஷா! மனதில் பட்டதை சொன்ன சூரி
Soori: இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான நந்தன் படத்தை பார்த்த நடிகர் சூரி, இத்திரைப்படம் தனக்கு திருப்பி அடிக்காத பாட்ஷாவை நினைவு படுத்துவதாகக் கூறி தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சசிகுமார்- இயக்குநர் இரா.சரவணன் கூட்டணியில் நேற்று வெளியான திரைப்படம் நந்தன். இத்திரைப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
நந்தன் படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படம் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து, படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சூரி நந்தன் திரைப்படத்தை பார்த்த பின் ஏற்பட்ட அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். இதனை படத்தின் இயக்குநர் இரா.சரவணன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகழ்ந்த சூரி
அந்த வீடியோவில், நந்தன் படத்தை பார்த்தேன். இந்த படத்தை பார்ப்போமா வேண்டாமா என்ற தயக்கத்துடனே வந்தேன். படம் நன்றாக இல்லை என்றால் பொய் சொல்ல வேண்டுமே எனும் தயக்கத்திலேயே இருந்தேன். ஆனால் படம் பிரம்மாதமாக வந்துள்ளது. கதையை இயக்குநர் எப்படி கூறினார், எப்படி எழுதினார் என்பதைத் தாண்டி அது உருவமாக வெளியே வரும் பொழுது இத்திரைப்படம் சாட்டையால் அடித்தது போன்று உள்ளது. இந்தப் படம் திருப்பி அடிக்காத பாட்ஷாவை திரையில் காட்டியது போன்று இருந்தது. படம் மிகவும் அருமையாக உள்ளது.
படத்தின் பல இடங்களில் வரும் வசனங்கள் உங்களை அறியாமல் கைதட்ட வைக்கிறது. சில இடங்களில் விசிலடிக்க வைக்கிறது, சில இடங்களில் அழுக வைக்கிறது. படம் முடிந்து வெளியே வரும் போது சிறப்பான படம் பார்த்த அனுபவத்தையும் திருப்தியையும் தருகிறது. என நடிகர் சூரி கூறியுள்ளார்.இந்த வீடியோவை பகிர்ந்த இயக்குநர் இரா.சரவணன், சூரி அண்ணனின் வாழ்த்து நெகிழ வைக்கிறது. நந்தன் வெல்வான் எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கதைக்களம்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையே இத்திரைப்படம். நடிகர் பாலாஜி சக்திவேல் ஆதிக்க வர்க்க அதிகாரம் மூலம் எப்படி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். திடீரென்று, அந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை தலைவராக்கினால் என்ன நடக்கும் என்ற கதையை இயக்குநர் சுவாரசியம் நிறைந்த கதைக்களமாக அமைத்துள்ளார்.
இந்த படத்தில் அம்பேத்ராஜாக வரும் சசிகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக நடித்துள்ளார். மேலும், இவர் படத்தில் ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி அளித்தாரா? அவரது மக்களின் உரிமைகளை மீட்டாரா என்பதே மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் பாராட்டு
முன்னதாக, இந்தத் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், படத்தின் முதல் காட்சி, முதல் பிரேமிலேயே இயக்குநர் இரா.சரவணன் என்னை பிரமிக்க வைத்து விட்டார். எனக்கு இருக்கும் சினிமா அறிவுக்கு இந்தப் படத்தின் முதல் காட்சி மிகவும் பிரமிப்பாகவே இருந்தது.சசிக்குமார் தனது வெள்ளந்தியான நடிப்பில் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்பட வைத்து உள்ளார். சசிகுமார் இந்தப் படத்தில் உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்தார். படம் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. படம் பார்த்தபோது நிறைய இடத்தில் சிரித்தேன்.நிறைய இடத்தில் யோசித்தேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியாக மிக வேகமாக கை தட்டினேன் என தனது பாராட்டுகளை வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.