'இவங்களுக்கு பதில் சொல்ல நான் ஜெயிக்கல.. சிரிச்சிட்டு வந்துடுவேன்..' வலிகளை பகிர்ந்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள சிவகார்த்திகேயன் திரையுலகில் சந்தித்த அவமானங்கள் குறித்து பேசிய கருத்துகள் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் முக்கியமானவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர், சின்னத்திரையில் அறிமுகமாகி பின் படிப்படியாக தன்னை மக்கள் மனதில் அமரச் செய்தார்.
அதன் தொடர்ச்சியாகவே வெள்ளித் திரைக்குள் வந்தார். பாண்டிராஜின் மெரினா படத்தில் தொடங்கிய பயணம் சரசரவென தற்போது 25வது படத்தில் வந்து நிற்கிறது.
இந்திய மக்களின் விருப்ப படம்
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் இந்திய மக்களுக்கே பிடித்த படமாக அமைந்தது. இந்தப் படம் ஒரு மாதத்திற்கும் மேலாக திரைத்துறையில் ஓடி தன் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இது இப்படி இருக்க, தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான அங்கிகாரம் கிடைக்க போராடி வரும் நடிகர்களுக்கு மத்தியில், தன் உழைப்பால் மேலே வருவதும் அந்த சமயத்தில் நடிகர் விஜய்யின் வாழ்த்துகளைப் பெறுவதும் பெரிய விஷயம்.
திரைத்துறையில் கிடைத்த அவமானம்
இப்படி, சிவகார்த்திகேயனின் கெரியர் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அவர் திரைத்துறையில் தனக்கு நடந்த அவமானங்கள் குறித்து அனுபமா சோப்ராவின் நேர்காணலில் பேசியுள்ளார்.
அந்தப் பேட்டியில், தற்போதுள்ள சினிமா துறையில் ஒரு சாதாரண மனிதன் சாதித்து மேலே வருவதை பார்த்து பாராட்டும் குணம் கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், அவர்கள் இருக்கும் அதே இடத்தில் சாதாரண மனிதனின் வளர்ச்சியை பிடிக்காதவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.
உனக்கு இங்க என்ன வேலை
நீ யார்? உனக்கு ஏன் இதெல்லாம் கிடைக்கிறது? நீ எப்படி இங்கே வந்த என கேட்கும் நபர்களும் இங்கு அதிகம் தான். ஏன் என் முகத்திற்கு நேராகவே பலர் இந்தக் கேள்வியை கேட்டிருக்கின்றனர். நீ இங்க என்ன பண்றன்னு பலபேர் என்னை கேட்ருக்காங்க.
நான் சிரிச்சுட்டே போயிடுவேன்
அப்படி கேட்டவங்ககிட்ட நான் எந்த பதிலும் சொல்ல மாட்டேன். என்ன அசிங்கப்படுத்திட்டு இருக்கவங்கள பாப்பேன். அவங்க என்ன சொல்றாங்கன்னு கேப்பேன். அத நல்லா கவனிச்சு தெரிஞ்சுப்பேன். அப்புறம் அங்க இருந்து சிரிச்சிட்டே வெளிய வந்துடுவேன். என்ன அசிங்கப்படுத்துன யாருக்கும் நான் பதில் சொன்னதே இல்லை என்றார்.
இந்த வெற்றி பதிலடி கொடுக்க அல்ல
அத்துடன், என்னை அசிங்கப்படுத்தியவர்களுக்கு என் வெற்றி பதில் சொல்லும் என நான் நினைத்ததே இல்ல. அவங்களுக்காக என் வெற்றிய செலவிட மாட்டேன். என் வெற்றியை அவர்களது வெற்றி போல கொண்டாடும் மக்களும் ரசிகர்களும் இருக்காங்க. என்னை முன்னேற்ற துடிச்ச, என்கூட சேர்ந்து 100 சதவீதம் உழைப்ப போட்டவங்க இருக்காங்க.
இந்த வெற்றி எல்லாம் அவங்களுக்கு சொந்தமானது. அதுமட்டுமில்லாம என்னைப் போல சினிமாவுக்கு வந்து சாதிக்கனும்ன்னு நெனச்ச பலபேருக்கு இந்த வெற்றி சொந்தம். அப்படிப்பட்ட வெற்றிய பழிவாங்க யூஸ் பண்ண மாட்டேன் என்றார்.
சோசியல் மீடியாவுல விமர்சனம்
மேலும் பேசிய அவர், இந்த உலகில் சில பேர் இருக்காங்க. என் படம் எப்போ ரிலீஸ் ஆனாலும் சோசியல் மீடியாவுல கருத்து சொல்லுவாங்க. என் படம் தோல்வி அடைஞ்சிருச்சு, மக்களுக்கு பிடிக்கலன்னா என்னை மட்டும் குறை சொல்றது. அந்தப் படத்திற்காக என்னை தாக்கி பேசுவாங்க. ஆனா படம் ஹிட் ஆகிடுச்சின்னா என்னைத் தவிர படத்துல இருக்க, அதுக்காக வேலை செஞ்ச எல்லாரையும் பாராட்டுவாங்க. புகழ்ந்து பேசுவாங்க. அதை எல்லாம் நாம கண்டுக்காம இருக்கனும் எனக் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்